பதிவு செய்த நாள்
04
மார்
2013
10:03
காஞ்சிபுரம்: பெருநகரில் 400 ஆண்டுகளாக, பொது மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த, பிரம்மபுரீஸ்வரர் கோவில் குளத்தை, தூர் வாரி அழகுப்படுத்த வேண்டும், என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது பெருநகர். இங்கு, புகழ்பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோவிலில் இரு கால பூஜை நடக்கிறது. கோவிலுக்கு சொந்தமான தாமரை குளம், கிராமத்தின் வடக்குப் பகுதியில் அமைந்து உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தில், 12 படிகள் உள்ளன. ஐந்தாம் நாள் விழா ஒவ்வொரு ஆண்டும், பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், தை மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறும். ஐந்தாம் நாள் விழாவில், உற்சவர் தாமரை குளக்கரையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இது தவிர கோவில் குளத்தில், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், ஆகிய நால்வருக்கும் குரு பூஜை நடத்தப்படுவது வழக்கம்.
தாகம் தீர்த்த குளம்: பெருநகர் கிராம மக்கள் 400 ஆண்டுகளாக, குளத்து நீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், பெருநகர் கிராமத்தில் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் பணி துவங்கியதால், கிராம மக்கள் குளத்து நீரை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர். இதனால் போதிய பராமரிப்பு இல்லாமல், குளக்கரையில் முட்புதர் மண்டியுள்ளது. குளத்தின் படிக்கட்டுகள் சரிந்து விட்டன. குளம், குட்டையாக மாறி வருகிறது. குளக்கரையில் உள்ள புளிய மரங்களை, மர்ம நபர்கள் வெட்டி எடுத்து செல்கின்றனர். குளக்கரையில் பெரிய கல்மண்டபம் அமைந்துள்ளது;
பாதயாத்திரை செல்வோர், மண்டபத்தில் தங்கி, ஓய்வு எடுத்து செல்வர். இம்மண்டபத்தின் ஒருபுறம் சரிந்து விழும் நிலையில் உள்ளது. கோவில் குளத்தையும், கல்மண்டபத்தையும் சீரமைக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.