பதிவு செய்த நாள்
05
மார்
2013
05:03
நீமதங்க மாமுனியைத் தரிசித்தாலே போதும். ஞானம் சித்திக்கும். ஆனால் அவரைக் காண்பது மிகவும் கடினம். அவர் தரிசனம் தர விரும்பினாலும், அவருடைய சீடர்கள் அவரிடம் செல்ல அனுமதிப்பது கஷ்டம். எனவே, அவரைத் தரிசிப்பது உன் சாமர்த்தியம் என்றாள் அந்த சன்னியாசினி. இதைக் கேட்ட வேடுவப் பெண், மதங்க மகரிஷியின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றாள். ஆசிரமத்தின் வெளியே நின்ற சீடர்கள். இங்கு பெண் வாடையே ஆகாது! நீ ஆசிரமத்தின் சுற்றுப்புறத்தில் இருப்பதே அபசாரம் என்று விரட்டினர். அங்கிருந்து விலகி, சற்றுத் தூரம் சென்றாள். ஒரு மரத்தின்மீது ஏறி அமர்ந்தாள். மதங்க ரிஷி வருகிறாரா என்று பார்த்தவாறு காத்திருந்தாள். பகல் மறைந்து இரவின் ஆதிக்கம் படர ஆரம்பித்தது. மகரிஷி வரவில்லை. எனினும் சலிக்காமல் காத்திருந்தாள். வைகறைப் பொழுது, அவள் எதிர்பார்த்துக் காத்திருந்தது வீண் போகவில்லை. மதங்க மகரிஷி கல்லும் கரடுமான ஒற்றையடிப் பாதை வழியே நீராடச் சென்றார். இதைக் கண்ட அவள் மிகவும் மனம் வருந்தினாள்.
ஐயோ! இது என்ன கொடுமை? மாமுனிவர் திருப்பாதம் நோக, கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதையில் நடந்து இந்த இருட்டில் நீராடச் செல்கிறாரோ! என வருந்தியவள். மறுநாள் முன்னிரவுப் பொழுதிலேயே கிளம்பினாள். மகரிஷி செல்லும் பாதையிலிருந்த கற்களையும் முட்களையும் களைந்தாள். அந்தப் பாதையில் நீர் தெளித்து, குளிர்ச்சியும் மென்மையும் பெறச் செய்தாள். பாதை முழுவதும் மணமுள்ள காட்டு மலர்களைப் பரப்பினாள். பின் சற்றுத் தொலைவுக்கு ஒரு தீப்பந்தம் ஏற்றிவைத்து, பாதை நெடுக ஒளி வீசச் செய்தாள். இவ்வளவும் செய்து, முன் போலவே சென்று மரத்தில் ஏறி அமர்ந்தாள். மறுநாள் மதங்க மகரிஷி நீராடச் சென்றார் எனினும் அவரிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. வேடுவப் பெண்ணும் தொடர்ந்து சுத்தப்படுத்தி வந்தாள். இப்படியே மூன்று நாட்கள் கடந்தன.
நான்காம் நாள் மதங்கர் தன் சீடர்களிடம் இது வரை நான் நீராடச் சென்ற பாதை இருட்டாகவும் கற்களும் முட்களும் நிரம்பியிருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக அப்பாதை மென்மையாகவும் தீப்பந்தங்களால் ஆங்காங்கே வெளிச்சத்தோடும் காணப்படுகிறது. இப்படிச் செய்தவர் யார்? என்று கேட்டார் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அன்று முன் இரவுப் பொழுதிலேயே நீராடச் சென்ற மகரிஷி. அங்கு பாதையைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்த வேடுவப் பெண்ணைக் கண்டார்.
மகளே! நீ யார்? ஏன் இந்தப் பாதையைத் தூய்மைப்படுத்துகிறாய்? என்று கேட்டார். அவள் நடந்தவற்றைச் சொன்னாள். சுவாமி! எப்படியாவது தங்களைத் தரிசித்து, தங்களுக்கு சிஷ்யை ஆகவேண்டும் என்ற வைராக்கியத்தாலும், தங்களைப் போன்ற மகரிஷி திருப்பாதம் நோக கரடு முரடான பாதையில் நீராடச் செல்கிறாரே என்ற ஆதங்கத்தாலும் நான் இப்படிச் செய்தேன். பிழை இருந்தால், பொறுத்தருள வேண்டும் என்று விநயமாகக் கூறி வணங்கினாள். மகரிஷி அவளுடைய பக்தியையும், மெய்ஞானத்தை அறிந்துகொள்வதில் அவளுக்கிருந்த ஆர்வத்தையும் கண்டார். அவளைத் தன் சிஷ்யையாக ஏற்று, ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார். அந்த வேடுவப் பெண்ணே சபரி! காலம் உருண்டோடியது தீர்க்கமாய் மெய்ஞானம் பெற்ற சபரிக்கு ராமனின் தரிசனம் வாய்த்தது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கினாள், தொழுதாள் மகிழ்ந்தாள். ராமனுக்காக காடுகளில் அலைந்து திரிந்து தான் தேர்ந்தெடுத்திருந்த கனிகளைக் கொடுத்தாள். ராமன் சபரியின் பக்தியில் கட்டுண்டான்.
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்! என்றான். நீ எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே இருந்துவிடேன் என்று வேண்டினாள் சபரி. ராமன், சபரியைப் பார்த்து புன்னகைத்தவாறே.... இந்த அவதாரத்தில், நான் இன்னும் ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அடுத்து, கிருஷ்ண அவதாரம் எடுப்பேன், அப்பறவியில் நீ என் தங்கை சுபத்திரையாகப் பிறப்பாய். அப்போது எந்தச் சமயத்தில் நீ நினைத்தாலும் உன்னிடம் வந்து நிற்பேன். என்றான். சபரி என்ற வேடுவ பெண், பக்தியினால் பரந்தாமனுக்கே தங்கையானாள்.