பதிவு செய்த நாள்
12
மார்
2013
10:03
சேலம்: சேலம் டவுன் அங்காளம்மன் கோவிலில், நேற்று மயானக் கொள்ளை திருவிழா, கோலாகலமாக நடந்தது. விழாவில், காளி வேஷமிட்டோர், பக்தர்கள் கொடுத்த ஆடு,கோழிகளை ஆவேசமாக கடித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இக்கோயிலில், ஆண்டுதோறும், மகா சிவராத்திரி முடிந்த மறுநாள், மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறும்.நேற்று, கோயிலில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின், பக்தர்கள், காளி வேஷமிட்டு, கையில் தடியுடன், காக்காயன் சுடுகாட்டை நோக்கி புறப்பட்டனர். நேர்த்திக்கடன் செலுத்தும் மக்கள், காளி வேடம் அணிந்து புறப்பட்டவர்களிடம், வழி நெடுகிலும், ஆடு, கோழிகளை வழங்கினர். பொதுமக்கள் வழங்கிய, ஆடு, கோழிகளை ஆவேசமாக கடித்து, ரத்தத்தை உறிஞ்சினர். தொடர்ந்து, காக்காயன் சுடுகாட்டுக்கு சென்று, அங்கு, சடலங்களை எரித்த சாம்பலை, உடலில் பூசி கொண்டனர். சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தில் புரண்டு, ஆவேச தாண்டவம் ஆடினர். பின், அங்கிருந்த சடலங்களின் மண்டை ஓடு, எழும்பு ஆகியவற்றை கையில் ஏந்தியும், வாயில் கவ்வியப்படியும், கோவிலுக்கு திரும்பினர். குழந்தை பாக்கியம் இல்லாதோர், உடல் நல குறைவு ஏற்பட்டோர், வேலைக்காக காத்திருப்போர் உள்ளிட்ட பலர், மயானக் கொள்ளை உடை அணிந்து வந்த பக்தர்களிடம், ஆசி பெற்றனர். இதே போல், செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு ஆகிய பகுதிகளில் உள்ள சுடுகாடுகளிலும், மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.