பதிவு செய்த நாள்
19
மார்
2013
11:03
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் இருந்த, 200 ஆண்டு பழமையான கோவில் மணி பழுதடைந்ததால், நேற்று, 152 கிலோ கொண்ட புதிய மணி பொருத்தப்பட்டது.ஓசூர் தேர்ப்பேட்டையில் மலை மீது அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான, இக்கோவில் பிரதான ராஜகோபுரத்தில், 200 ஆண்டு பழமையான மணி இருந்தது.கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் துவங்கும் போது, இந்த கோவில் மணி அடித்து பக்தர்களுக்கு அறிவுறுத்தும் பழக்கம், நூற்றாண்டு காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மணி கடந்த சில மாதம் முன் பழுதடைந்தது.பழுதடைந்த மணிக்கு பதிலாக புதிய மணி பொறுத்த ஹிந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் கோவில் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, நூற்றாண்டு பழமையான வெண்கலத்தால் செய்யப்பட்ட அந்த பழைய மணியை உருக்கி, கூடுதலாக வெண்கலம் சேர்த்து, புதிய மணி செய்யப்பட்டது.புதிய மணி, 152 எடை கொண்டது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 26 ஆயிரம் ரூபாய். புதிய கோவில் மணி பொருத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவில் தேரோட்ட கமிட்டி தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கவுன்சிலர் நாகராஜ், ஹிந்து முன்னனி முருகன், கமிட்டி உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.கோவில் பூசாரி சந்திரசேகர், புதிய மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். தொழிலாளர்கள், கிரேன் மூலம் தூக்கி புதிய மணி ராஜகோபுரத்தில் பொறுத்தினர். புதிய கோவில் மணி பொறுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்த்கள் கலந்து கொண்டனர்.