பதிவு செய்த நாள்
20
மார்
2013
10:03
திருப்புத்தூர்: பிரகாரம் முழுவதும் வாழை மரங்கள் நிறைந்திருப்பதும், தல விருட்சமாக அபூர்வ குணம் கொண்ட வாழை மரங்கள் இருப்பதும், திருக்களம்பூர் கதளிவனேஸ்வரர் கோயிலின் தனித்துவமாக உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகேயுள்ள திருக்களம்பூர் பகுதி, முன்பு கதளி வனமாக இருந்துள்ளது. இதனால், இக்கோயிலின் மூலவர் "கதளிவனேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இக்கோயில் பிரகாரம் முழுவதும் வாழை மரங்கள் வாழையடி, வாழையாக வளர்ந்து வருகின்றன. யாரும் இம்மரங்களுக்கு தண்ணீர் விடுவது இல்லை. பக்தர்கள் இவ்வாழை மரங்களுக்கு இடையே சென்று பிரகாரத்தை வலம் வருகின்றனர். இந்த மரங்களின் தண்டுப்பகுதியை வெட்டினால், சிவப்பு நிற நீர் வருகிறது. பழங்கள் பூவன்பழம் போலவும்,உரித்தால் ரஸ்தாளிபழம் போலவும் உள்ளது. இப்பழங்களை யாரும் சாப்பிடுவதில்லை.சாப்பிட்டால், தோல் நோய் வரும் என்ற அச்சம் உள்ளது.பக்தர்கள் விருப்பப்பட்டால், இப்பழங்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் மூலவருக்கு படைக்கப்படுகிறது. பக்தர்களும் எடுத்துக் கொள்கின்றனர். இப்பஞ்சாமிர்தம் விரைவில் தண்ணீராக உருகி விடுகிறது. இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, இங்குள்ள சிவலிங்கம் மேற்புறம் 3 பிளவுகளாக இருப்பது. இந்தத் தோற்றத்தில், வேறு எந்த கோயிலிலும் லிங்கம் இல்லை என்று கூறப்படுகிறது. குதிரையின் குளம்பு பட்டதால்லிங்கத்தில் இப்பிளவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இப்பிளவு ஏற்பட்டதற்கு இரு வித காரணம் கூறுகின்றனர்.
முதலாவதாக, இப்பகுதியில் தான் ராமாயண காலத்தில் வால்மீகி, வாமதேவர், வசிஷ்டர் ஆகியோர் அசுவமேதயாகம் நடத்தி,செங்கதளியை (செவ்வாழை) யாகத்தில் இட்டதாகவும், ராமருடைய பட்டத்துக் குதிரையை அவரது மகன்கள் லவ, குசர்கள் இங்கு பிடித்துக் கட்டியதாகவும், இந்தக் குதிரையின் கால் குளம்பு பட்டதால், லிங்கத்தில் இப்பிளவு ஏற்பட்டதாகவும், இந்தப் பகுதி "குளம்பூர் என்றழைக்கப்பட்டு, பின்னர் திருக்களம்பூர் என மருவியதாகவும் புராணச் செய்திகள் கூறுகின்றன. இரண்டாவதாக, இக்கோயிலின் மூலவரான கதளிவனேஸ்வரர், வைத்தியநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.முன்னர் பாண்டிய மன்னர் ஒருவர் இப்பகுதியில் வேட்டையாடுகையில், அவரது குதிரையின் கால் குளம்புகள் மண்ணில் புதைந்திருந்த சிவலிங்கத்தின் மேல் பட்டு, ரத்தம் வடிந்ததாகவும், இதனால், மன்னருக்கு கண் பார்வை போய், பின்னர் இறைவன் " முதியவராக வந்து வைத்தியம் செய்து, கண்ணொளியை வழங்கியதால் "வைத்தியநாதன் என்று அழைக்கப்படுவதாகவும் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன. இக்கோயிலில் ரிஷபவாகனத்தில் எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வருக்கு வியாழக்கிழமை பாயாசம் வைத்து வழிபட்டால், திருமணம் கை கூடும் என்றும், குழந்தை இல்லாதவர்கள், இங்குள்ள கொடிமரத்திற்கு வாழைக்காயை பலி கொடுத்தால், மகப்பேறு கிட்டும் என்றும் நம்புகின்றனர். புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்களம்பூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி யிலிருந்து 10 கி.மீ.,தொலைவிலும், திருப்புத்தூரிலிருந்து 10 கி.மீ.,தொலைவிலும் உள்ளது.