பதிவு செய்த நாள்
20
மார்
2013
10:03
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான, கோவில் நில குடியிருப்புகளுக்கு, வாடகை நிர்ணயம் செய்வதில், நிர்வாகம் தாமதம் காட்டி வருவதால், போராட்டத்தில் இறங்க, குடியிருப்போர் நலச் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்து சமய கோவில் அடிமனை குடியிருப்போர், நலச் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: அறநிலையத் துறையுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, கோவில் நிலத்தில் வீடு கட்டவும், அதை, உள்வாடகைக்கு விடவும் அனுமதி உள்ளது. இதை, ஐகோர்ட்டும் ஏற்று கொண்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், இந்து சமய அறநிலைய துறை, எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி, திடீரென, வாடகையை பல மடங்கு உயர்த்தியது. குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளுக்கு, வணிக நிறுவனங்களுக்குரிய வாடகையை நிர்ணயித்தது. அதை, முன் தேதியிட்டு, 2001ம் ஆண்டு முதல் கணக்கிட்டு, வாடகை பாக்கி என, அறிவித்தது. இதனால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். குத்தகைதாரர்களிடம் கலந்து ஆலோசித்து, கட்டணம் நிர்ணயிப்பதாக, அறநிலையத் துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால், இன்று வரை, அதிகாரிகள் அழைக்கவில்லை. கோவில் வாசலில் எங்கள் பெயரை வெளியிட்டு, மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர். மனை கட்டணத்தை நிர்ணயிக்கும் வரை, நாங்கள் வாடகை செலுத்தப் போவதில்லை. அறநிலையத் துறை செயல்பாட்டை கண்டித்து, பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -