பதிவு செய்த நாள்
20
மார்
2013
10:03
திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே கிடைத்த, சில புதை பொருட்களை தொடர்ந்து, ஆய்வு செய்ததில், மேலும், ஐம்பொன் சிலை உள்ளிட்ட, சில பொருட்கள் கிடைத்தன. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே, உதய மார்த்தாண்டபுரத்தில், 1,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட, ஆதித்ய இருதய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலைச் சுற்றி, தென்னந்தோப்பும், தனியாருக்குச் சொந்தமான இடங்களும் உள்ளன. அப்பகுதியில் வசிக்கும் நடராஜ் என்பவர், வீட்டின் பின் பக்கம், வேலி அமைக்க, கடந்த, 17ம் தேதி பள்ளம் தோண்டினார். அப்போது, சுவாமி சிலை அடி பீடம், பூஜைக்குரிய தட்டு, பஞ்ச பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் கிடை த்தன. திருத்துறைப்பூண்டி தாசில்தார் வைத்தியநாதன் மற்றும் வருவாய்த்துறையினர், அங்கு சென்று, பொருட்களைக் கைப்பற்றினர். இந்நிலையில், அப்பகுதியில், மறுநாள் காலை முதல், ஜே.சி.பி., இயந்திரம் மூலம், தோண்டி ஆய்வு செய்தனர். இதில், ஐம்பொன்னாலான துர்க்கை சிலை, பெரிய சங்கு, சிறிய கெண்டி, திருவாச்சிப்பொருட்கள், தாம்பாளத் தட்டு, ராமர் வில் பாதி, பூஜை மணிகள், முக்காலி கிடைத்தன. இப்பொருட்களை கைப்பற்றிய அதிகாரிகள், திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்தில், பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும், அப்பகுதியில், வேறு பொருட்கள் புதைந்து கிடக்கிறதா என, வருவாய்த் துறையினர் தொடர்ந்து, ஆய்வு செய்து வருகின்றனர்.