பதிவு செய்த நாள்
21
மார்
2013
10:03
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி பிரம்மோற்சவ விழாவில், நேற்று உற்சவர் பல்லக்கு சேவையில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை ஒட்டி தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. உற்சவர் சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில், காலை, இரவு என, இருவேளைகளிலும், ஒரு வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நான்காம் நாளான நேற்று, காலை, சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கு சேவையில் எழுந்தருளி அருள்பாலித்தார். இரவு, 8:00மணிக்கு உற்சவர் சோமாஸ்கந்தர், நாக வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் புகழேந்தி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.