பதிவு செய்த நாள்
28
மார்
2013
04:03
நவக்கிரகங்களில் சூரியன் புத்திர பாக்கியம் அருளும் தேவனாகக் கருதப்பட்டு, பன்னெடுங்காலமாகப் பூஜிக்கப்பட்டு வருகிறான். சூரியனின் அனுக்கிரகத்தால் குழந்தை பாக்கியம் ஏற்படுவதுண்டு என்பது பலருக்கும் தெரியும். சூரியனே தன் அம்சத்தோடு குழந்தை பிறக்கச் செய்த புராணக் கதைகளும் உண்டு. மகாபாரதத்தில் குந்திதேவி சூரிய பகவானை உபாஸித்து, துர்வாஸர் உபதேசித்த மந்திரத்தை உச்சரிக்க... சூரியனே நேரில் வந்து ஒரு குழந்தையைத் தந்த கதையைப் பார்க்கிறோம். அந்தக் குழந்தைதான் கவச குண்டலங்களுடன் பிறந்த கர்ணன். குரு÷க்ஷத்திரப் போரில் இறக்கும் தறுவாயில் தன்னிடம் யாசகம் கேட்டுவந்த பகவான் கிருஷ்ணனுக்குத் தான் செய்த புண்ணியங்களையே தானம் செய்த மகா புண்ணியவான் அவன். இதன்மூலம் சூரியனுக்கே பெருமை தேடித் தந்தான் கர்ணன். ஆனால், இதற்கு நேர்மாறாக, கொடுமையே உருவான ஓர் அரக்கனும் சூரியனுக்குப் புத்திரனாகப் பிறந்த கதை ஒன்று உண்டு. இது சத்ய யுகத்தில் நிகழ்ந்தது. கங்கைச் சமவெளிப் பகுதியில், சக்ரபாணி என்னும் குறுநில மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அதிரூபவதியாகவும் பதிவிரதையாகவும் இருந்த அவனது மனைவி உத்திரைக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. ஆழ்ந்த தெய்வ பக்தியும் தயாள குணமும் கொண்ட இவர்களை இந்தக் குறை பெரிதும் வாட்டி வந்தது. மருந்து, மந்திரம், தந்திரம் எதனாலும் பலன் ஏற்படாத நிலையில் விரக்தியடைந்த மன்னன். சவுனக முனிவர் என்ற மகரிஷியைச் சந்தித்தான். அவன் குறையை அறிந்த முனிவர், அதற்கான காரணத்தை விளக்கி, அந்தக் குறையை நீக்கும் விழிமுறையையும் சொன்னார்.
மன்னா! உன் மூதாதையர் ஒருவர் செய்த பாவத்தால் பிறவியிலேயே உன் உடற்கூறில் ஒரு குறை உள்ளது. குழந்தை பிறக்கும் வாய்ப்பை உண்டாக்க உனக்கு மேலும் உஷ்ண சக்தி தேவை. எனவே 41 நாட்கள் நீயும் உன் மனைவியும் சிரத்தா பக்தியுடன் சூரிய உபாஸனை செய்தால் சூரிய பகவானின் சக்தியே உன் உள்ளே கலந்து உனக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படும் நீ எத்தகைய குழந்தையை விரும்புகிறாயோ அது போலவே உனக்குப் புத்திரன் அல்லது புத்ரி பிறப்பார்கள். இந்த நாட்களில் சூரிய கிரணங்கள் உங்கள் இருவர் மீதும் விழும்படி இயற்கைச் சூழ்நிலையில்தான் உபாஸனை பூஜை செய்ய வேண்டும் என்று கூறி, வாழ்த்தினார். அதன்படியே சக்ரபாணியும், உத்திரையும் அரண்மனைக்கு அருகில் உள்ள கடற்கரைக்குச் சென்று தினமும் சூரிய பகவானை வழிபட்டார்கள். 40 நாட்கள் விரதம் முடிந்தது. அன்றிரவு உத்திரை ஒரு கனவு கண்டாள். அவள் கணவன் அந்தக் கனவில் வந்து அவளை மஞ்சத்துக்கு அழைக்கிறான் இன்னும் ஒருநாள் விரதம் இருக்கிறதே... அதற்குள் இப்படி விரத பங்கம் நிகழலாமா? என்று அவள் திகைத்து நிற்க, அந்த உருவம் அங்கிருந்து கிளம்பி, அவள் கணவனான மன்னன் உபவாஸம் இருக்கும் அறைக்குள் செல்கிறது. அதன்பின், அந்த உருவம் சூரியனைப் போல தேஜஸ் பெற்று, ஒளிப்பிழம்பாக மன்னனின் உடலில் நுழைந்துவிடுகிறது. சூரிய பகவான்தான் அருள் புரிந்துள்ளார் என்பதை இருவரும் உணர்ந்தனர். 41-வது நாள் விரதத்தைச் சிறப்பாகப் பூர்த்தி செய்தனர். சூரியன் அருளால் தங்களுக்குக் குழந்தை பிறக்கும் என்ற அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. 10 மாதங்களுக்குப் பிறகு தங்க விரக்கிரகம் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்தாள் உத்திரை. குழந்தை பிறந்ததுமே அதைச் சுற்றி ஓர் ஒளி வட்டம் தோன்றியது. இது என் வரப்பிரசாதம். புத்திரன் நீ விரும்பியது போலவே பிறந்துள்ளான். இவனை நல்லபடியாக வளர்தெடுக்கும் பொறுப்பு உன்னுடையது! என்று ஓர் அசரீரி கேட்டது.
புஜபல பராக்கிரமத்துடன் எல்லா தேசங்களையும் வென்று சக்ரவர்த்தியாக முடிசூடும் சர்வ வல்லமை மிக்க ஒரு புத்திரன் வேண்டும் என்றே விரும்பினான். மன்னன் சக்ரபாணி சிவனைப் போல் சர்வசக்தி மிக்கவனாக தன் புதல்வன் இருக்க வேண்டும் என்று விரும்பினான். அதன்படியே தான் அந்தப் புத்திரன் பிறந்தான். குழந்தை தங்கப் பதுமை போல் இருந்தாலும் தலைமுடி ரத்தச் சிவப்பாக இருந்தது குழந்தைக்கு இரண்டு கண்களைத் தவிர, இமை மூடிய நிலையில் மூன்றாவது கண் ஒன்றும் இருந்தது. இந்த அதிசய குழந்தைக்கு சிந்து என்று பெயரிட்டனர். தேக வலிமையும், முரட்டு சுபாவமும் யுத்த வெறியும் கொண்டவனாக வளர்ந்து வாலிபனானான் சிந்து. இவனது போர்த் திறமையை அறிந்த அசுர குரு சுக்கிராச்சார்யர் இவனுக்கு எல்லா வித்தைகளையும் விரும்பிச் சொல்லிக்கொடுத்து. தானவர் குல சேனைக்குத் தலைவனாகவும் ஆக்கினார். சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து அதீத சக்திகளைப் பெறும் வழிமுறைகளையும் சுக்ராச்சார்யர் சிந்துவுக்கு எடுத்துக் கூறினார். பல வருடங்கள் அன்ன ஆகாரமின்றி சூரபத்மனைப் போல் தவமிருந்து சிவதரிசனம் பெற்றான் சிந்து. சுக்ராச்சார்யர் கூறியபடி அதீத சாயா சக்திகளையும் அழிவில்லா நிலையையும் வரமாகக் கேட்டான். போரில் வெல்லும் பல ஆயுதங்களையும் மாயா சக்திகளையும் தந்த சிவபெருமான், மரணமில்லா நிலையை எவராலும் பெற முடியாது என்பதை விளக்கினார். அப்படியானால் உங்கள் புத்திரர்களால் அன்றி வேறு எவராலும் எனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டுப் பெற்றான் சிந்து.
புராண காலத்தில் எல்லா அசுரர்களைப் போல சிந்துவும் தேவ லோகத்தை ஜெயித்து தேவர்களை அடிமையாக்கிக் கொண்டான். இவனது செயல்களைப் பார்த்து வருந்திய சக்ரபாணியும் உத்திரையும் சூரிய பகவானை மனமுருகப் பிரார்த்தித்தனர். தங்கள் மகனுக்கு நல்லபுத்தி கூறி அவனைக் காக்கும்படி வேண்டினர். சூரிய பகவானும் தன் அம்சத்தில் பிறந்த தன் புத்திரன் சிந்துவை அழைத்து அறிவுரை கூறினார். ஆனால் அவன் கேட்கவில்லை. மாறாக, சூரியனை அவமதித்தான். சூரிய பகவான் ஒருகணம் சிந்தித்தார். தன் அம்சமாக இருந்தாலும், சிந்துவை அழிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார். சிந்துவால் தேவர்களும், மற்றவர்களும் படும் துன்பத்திலிருந்து அவர்களைக் காக்க நினைத்தார். யாராலும் அழிக்கமுடியாத அவன் சிவபெருமானின் புத்திரனால் அழிந்துவிடுவான் என்பதைத் தெரிந்துகொண்ட சூரியன் அதற்கான வழியைத் தேடினார். சூரிய பகவானிடம் வேதம் கற்ற சீடர்களில் ஒருவர் விநாயகர். இன்னொருவர் ஹனுமான். தன் பிரதான சீடன் விநாயகனை அழைத்தார் சூரியதேவன். கணசோ! தேவர்களையும் நல்லவர்களையும் கொடியவள் சிந்துவிடமிருந்து நீதான் காப்பாற்றவேண்டும் உன்னால்தான் அவனது அகந்தையையும் ஆணவத்தையும் மட்டுமின்றி அவனையே அழித்தொழிக்க முடியும் என்றார். விநாயகர், ஒரு கணம் திகைத்துத் தடுமாறினார். சூரியதேவா! எனது குருவே! சிந்து உங்கள் மகன். அவனை அழித்து அந்தப் பெரும் பாவத்தை நான் எப்படி ஏற்பது? என்று கேட்டார். இது தன்னால் முடியாது என வாதாடினார். முடிவில் சூரிய தேவன் ஓர் உபாயத்தைக் கையாண்டார். சரி, உன் விருப்பப்படியே ஆகட்டும். ஆனால் எனக்கு நீ குருதட்சணை கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. எனக்குச் சேர வேண்டிய குருதட்சணையைக் கேட்டால் இப்போதே தருவாயா? என்ற கேட்டார் சூரிய பகவான். அதைவிட வேறு பாக்கியம் எனக்கு என்ன இருக்கிறது? வேதங்களையும் சாஸ்திரங்களையும் தங்களிடம் கற்று ஞானத்தைப் பெற்ற நான் நன்றிக் கடனாகத் தங்களுக்கு என்ன குருதட்சணை தரவேண்டும்? கேளுங்கள்.... தயங்காமல் தருகிறேன்! என்றார் விநாயகர்.
அப்படியானால் கொடிய அரக்கனான சிந்துவை என் புத்திரன் என்றும் பாராமல் சம்ஹாரம் செய்து, உலகுக்கு நன்மை செய். இதுதான் நான் கேட்கும் குருதட்சணை! என்றார் சூரியன். பந்த பாசங்களை அறுத்து, உலகுக்கு நன்மை செய்ய தனக்கு ஒரு வாய்ப்புத் தந்த குருவை வணங்கி தன் சம்ஹாரப் பணியைத் தொடங்கினார் கணபதி. போர்க்கோலம் பூண்டார் கணபதி. தன்னை எதிர்த்த சிந்துவுக்கு முதலில் அறிவுரைகளை கூறி, திருத்த நினைத்தார். அவன் கணபதியையே அழித்துவிடுவதாகச் சவால் விட்டான். சிவனிடம் பெற்ற மாயா சக்தியால் கணபதியுடன் போரிட்டான். மகேசனின் மைந்தன் அல்லவா மகா கணபதி? அரக்க குணம் மிகுந்த சிந்துவால் விநாயகப் பெருமானை எதிர்க்க முடியவில்லை. ஒன்பது நாட்கள் நடந்த போரில் சிந்து தன் சக்தியை எல்லாம் இழந்தான். அவனது உயிர்நிலை, அவனது மூடிய மூன்றாவது கண்ணில் இருந்ததை அறிந்த கணபதி, தன் அங்குசத்தால் அந்தக் கண்ணைத் தாக்க, சிந்து சம்ஹாரம் நிறைவுற்றது. முருகப்பெருமான் செய்த சூரசம்ஹாரத்துக்குப் பல யுகத்துக்கு முன்பே, அவரது அண்ணன் கணபதி செய்த சூரசம்ஹாரம் இது. தன் மகன் என்று தெரிந்தும் அவனை அழிக்க வழி செய்த சூரிய தேவனை தேவர்கள் அனைவரும் பாராட்டி வணங்கினர். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டி, தன் குரு கேட்ட குருதட்சணையைத் தந்து வெற்றி வாகை சூடிய மகா கணபதியை சிவனும் பார்வதியும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.