முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் இருந்தார். அவர் மகா பெரிய தபஸ்வி. அவர் பல காலம் கடுந்தவம் புரிந்ததால் மற்ற முனிவர்கள் அவர்மேல் மிகவும் மதிப்பு வைத்து இருந்தனர் ஆனால் இவ்வளவு தவம் செய்த முனிவருக்குத் தற்பெருமை எனும் பெருங்குறை மட்டும் இருந்தது. ஒருமுறை, அகத்தியர் முதலான ரிஷிகள் அவரைக் காணவந்தனர். செருக்கு கொண்ட வரமுனி அவர்களை மதிக்கவில்லை, மரியாதையும் செய்யவில்லை. கோபமுற்ற அவர்கள் மற்றவர்களை மதிக்காத நீர், எருமையாகக் கடவீர். என்று சபித்தனர். வரமுனியும் தன் தவறை உணர்ந்தார். வேண்டாம் என்னை அப்படி சபிக்காதீர்கள் என்று அவர்களையே சரணடைந்தார். அடுத்த பிறவியில் நீர் மகிஷமாகப் பிறப்பீர். கருணாமூர்த்தியும் பாபத்தைப் போக்குபவளுமான ஜகன்மாதா உமக்கு அனுக்ரகிப்பாள் என்றனர். வரமுனிதான் மகிஷாசுரனாகப் பிறந்தார்.
கடின தவம் மேற்கொண்ட மகிஷன் பிரம்மனிடம், யாரும் தன்னை வெல்லாதிருக்க வரம் கேட்டவன், அந்த லிஸ்டில் பெண்ணைச் சேர்க்கவில்லை ஒரு பெண் தன்னை வெல்வதா என்ற ஆணவம்! பிறகு தன் வரத்தினால் தேவர்களையும், தேவேந்திரனையும் ஓட ஓட விரட்டினான். பராசக்தியான அம்பிகையைத் தவிர, வேறெவராலும் அவனை வீழ்த்த முடியாது என்று உணர்ந்த தேவர்கள், தேவியைத் தொழுதனர். சகல தெய்வங்களின் தேஜசும் ஆற்றலும் கொண்டு அம்பிகை வெளிப்பட, மும்மூர்த்திகளும் தேவர்களும் நமஸ்கரித்தனர். தம் ஆயுதங்களையும் சக்திகளையும் அம்பிகைக்குத் தந்தனர். பதினெட்டு கைகளிலும் ஆயுதங்கள். தரித்து சிம்மவாஹினி ஷேரோவாலி மா கர்ஜித்தாள். அந்த கர்ஜனையில் அசுரப்படையே கதிகலங்கியது. போரில் பலத்த சேதமும் அடைந்தது. மகிஷன் பல்வேறு வடிவங்கள் எடுத்து, ஒவ்வோர் இடத்திலிருந்தும் வெவ்வேறு ரூபங்களில் தோன்றி போரிட்டான். ஒரு கட்டத்தில் அன்னையின் வாகனமான சிங்கத்தின்மீது மகிஷாசுரன் தன் கதையால் அடிக்க, அன்னை பொறுமை இழந்தாள் மகிஷ ரூபம் எடுத்தபோது, தான் காளி ரூபம் எடுத்து சக்ராயுதத்தைப் பிரயோகித்தாள். உடல் வேறு, தலை வேறாக இரண்டாக மகிஷன் பிளவுபட்டான். ஆதி பராசக்தியால் வதைக்கப்பட்ட அவன் தலை, ஜகன்மாதாவின் பாதத்தில் வந்து வீழ்ந்தது. முன் ஜன்மத்தில் செய்த புண்ணியத்தால் அவன் முக்தி பெற்றான்.