பதிவு செய்த நாள்
30
மார்
2013
11:03
நகரி: திருமலையில் தரிசனத்திற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால், ஆவேசம் அடைந்த பக்தர்கள், தேவஸ்தானத்திற்கு எதிராக கூச்சலிட்டனர். திருமலையில், நேற்றுமுன்தினம், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், இலவச தரிசனம் செய்வதற்கு, 24 மணி நேரமும்; 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனத்திற்கு, ஒன்பது மணி நேரமும்; பாத யாத்திரையாக வருபவர்கள், ஆறுமணி நேரமும் காத்திருக்க நேரிட்டது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் காத்திருந்ததால், பொறுமையிழந்த பக்தர்கள் திடீரென கூச்சலிட்டனர். கோவிலில் பூஷ்ப அங்கி சேவையில் பங்கேற்க வந்த பக்தர்கள், வி.ஐ.பி., தரிசனம், பாதயாத்திரை மற்றும் சிறப்பு நுழைவு பக்தர்கள் என, அனைவரும் வந்து கொண்டிருந்த போது, கோவில் பிரதான வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். அதனால், அங்கு கூடியிருந்த பக்தர்கள், தடுப்பு கேட்டுகளை உடைக்க முயற்சித்தனர். இதைக் கண்ட பாதுகாப்பு போலீசார், பக்தர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதையும் மீறி, பக்தர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.கோவில் அதிகாரிகளும் பக்தர்களை சமாதானப்படுத்தினர். நேற்றுமுன்தினம் இரவு, 8:00 மணிக்கு வரிசையில் வந்த பக்தர்கள் நிறுத்தப்பட்டதால், இந்தப் பிரச்னை எழுந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், சலசலப்பு அடங்கியது.