பதிவு செய்த நாள்
30
மார்
2013
11:03
திருச்செங்கோடு: கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், குபேர லட்சுமி கயிறு எனக்கூறி, 100 ரூபாய் வாங்கி கல்லா கட்டும் அர்ச்சகர்கள் மீது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற அர்த்நாரீஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இக்கோவில், வரலாற்று பெருமையும், புராண சிறப்பும், ஸ்தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற சிறப்புகளையும் பெற்று விளங்குகிறது. இங்கு, அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள், அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலை சுற்றுலாத்தலமாக அறிவித்துள்ளது. இக்கோவில், சதயம் நட்சத்திரத்திற்கு உரிய வழிபாட்டு ஸ்தலமாகவும் விளங்குகிறது. மேலும், 27 நட்சத்திர கோவில்களுக்கும், சுற்றுலா செல்லும் பக்தர்கள், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, கிருத்திகை மற்றும் விஷேச நாட்களில் சுற்று வட்டாரம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, ஸ்வாமியை வழிபட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், வெளியூர் பக்தர்களை குறிவைத்து, குபேர லட்சுமி கயிறு என, மஞ்சள், சிகப்பு கயிறுகளை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்து, கோவில் அர்ச்சகர்கள் கல்லா கட்டுகின்றனர். அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில், தேவஸ்தானத்துக்கு சொந்தமான விற்பனை நிலையத்தை தவிர, வேறு யாரும் விற்பனை செய்யக்கூடாது. ஆனால், ஸ்வாமியை வழிபட்டு வெளியே வரும் வழியில், 64 நாயன்மார், உச்சிபிள்ளையார் கேவாடல் ஆகிய இடங்களில், அர்ச்சகர்கள், அப்பாவி பக்தர்களிடம், சகல ஐஸ்வர்ய கயிறு, குபேர லட்சுமி கயிறு என சொல்லி, நூதன முறையில், 100 ரூபாய் கறந்து விடுகின்றனர். அப்பாவி பக்தர்களை, கயிறு காட்டி கல்லா கட்டும் அர்ச்சகர்கள் மீது இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், இது போன்ற கயிறுகளை விற்பனை செய்வதை தடை விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.