பதிவு செய்த நாள்
09
ஏப்
2013
10:04
பெ.நா.பாளையம்: பிற உயிர்களிடத்து அன்பு செலுத்த கற்றுக்கொண்டால், உலகம் செழிக்கும், என, மாதா அமிர்தானந்த மயி அறிவுறுத்தினார். கோவை நல்லாம்பாளையம், அமிர்தா வித்யாலய வளாகத்தில் உள்ள பிரமாஸ்தான கோவிலில், இரண்டாவது நாள் ஆண்டு விழாவில், சனிதோஷ நிவாரண பூஜை, பஜனை, தியானம் நடந்தது. இதில் பங்கேற்ற மாதா அமிர்தானந்த மயி, பக்தர்களுக்கு தரிசனம் அளித்து பேசியதாவது: பிறரிடம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், அவர்களின் நற்பண்புகளை ஏற்று, அதற்கேற்ப வாழ பழகிக் கொள்ள வேண்டும். எதிர்பார்ப்பு இருந்தால் தான், ஏமாற்றம் ஏற்படும். ஒவ்வொரு உயிருக்குள்ளும், ஒரு திறமை இருக்கிறது. குயிலின் குரல் வளம், காக்கைக்கு வராது. யானையின் பலம் தவளைக்கு வராது. வாழ்க்கையை, வாழ பழகிக் கொள்ள வேண்டும். வாழ்க்கை, கடல் போன்றது. இது, அமைதியாக இருக்கும் போது, கப்பல் செலுத்தும் மாலுமிக்கு எவ்வித சிரமமும் இருக்காது. புயல் நேரத்தில், கப்பலை செலுத்துவது தான் கடினம். அது போல, வாழ்க்கையில் துன்பம் ஏற்படும் போது, அதை திறமையாக கொண்டு செல்ல, ஆன்மிக வழியில் சென்று வெற்றி காண வேண்டும். முடிந்தவரை, நம்மை சுற்றி இருப்பவர்களுடன், இசைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு தீய செயலை செய்தாலும், அதற்கான விளைவுகளை, நாம் அனுபவித்தே ஆக வேண்டும். வாழ்க்கையில் சில சூட்சுமங்கள் உள்ளன. அதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சென்ற பிறவியில், நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் தான், இப்பிறவி அமைகிறது. ஒரு சிலர் மட்டும் பணக்காரர்களாகவும், சிலர் ஏழைகளாகவும் இருப்பதற்கு, அதுவே காரணம். அதற்காக, ஏழைகள் சோர்ந்து போய்விடக் கூடாது. அவர்கள், இவ்வுலகில் புண்ணியக் காரியங்களை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். முற்பிறவியில் செய்த பாவங்களைப் போக்க, முதல் கட்டமாக பிரார்த்தனைகளை மேற்கொள்ளலாம். இரண்டாவதாக, விரதம், தான தர்மங்களை செய்து, பாவத்தின் கடுமைகளை குறைக்கலாம். ஆனால், சில கடுமையான பாவங்களை செய்திருந்தால், அதற்கான விளைவுகளை கட்டாயம் அனுபவித்தை தீர வேண்டும். எந்த ஒரு செயலையும், மனசாட்சிக்கு எதிராக, விரோதமாக செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால், வாழ்க்கையில் பெரும் துன்பம் வந்து சேரும். மற்றவர்களுடன் கருத்தை பரிமாறிக் கொள்ளும் போது, நம்மிடம் இருந்து வெளிப்படும் வார்த்தைகள், நம் இருதயத்தில் இருந்து வெளிவந்தவைகளாக இருக்க வேண்டும். தற்போது, தகவல் தொடர்பு சாதனங்கள், பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டியுள்ளன. இருந்தாலும், கருத்துகளை பரிமாற்றம் செய்து கொள்வதில், தெளிவு இருக்க வேண்டும். உரையாடலின் போது, அகத்தூய்மை அவசியம். கருத்துகளை தெளிவாக புரிந்து கொண்டு, அதே அளவு தெளிவோடு வெளிப்படுத்த வேண்டும். நமது மனதை, கட்டுப்பாடுகள் நிறைந்த மனதாக மாற்றிக் கொள்ள வேண்டும். பிற உயிர்களிடத்து அன்பு செலுத்த கற்றுக்கொண்டால், உலகம் செழிக்கும். அன்பு எனும் ஏணியில் ஏறி, இறைவன் என்ற சிகரத்தை அடைய வேண்டும். பொறுமை, பிறர் செய்யும் தவறுகளை மன்னிக்கும் இயல்பை வளர்த்து கொள்ள வேண்டும். ஆணவம், கொடிய நாகத்தை போன்றது. அதை, நமது மனதில் இருந்து அகற்ற வேண்டும். ஆணவம் இருந்தால், வாழ்க்கையை உயர்த்திக் கொள்வது கடினம். ஒரு நபர் தீயவராக இருந்தாலும், அவரிடம் நல்ல குணங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டினால், அவர் நல்லவராக மாற வாய்ப்பு உருவாகும். அடுத்தவர்களிடம் குறைகள் இருப்பதாக சுட்டிக் காட்டும் முன், அதே குறைகள் நம்மிடம் இருந்தால், அதை உடனடியாக நீக்கி கொள்ள வேண்டும். நம்முடன் இருக்கும் நண்பர்கள், தீயவழியில் சென்றாலும், அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இவ்வாறு, மாதா அமிர்தானந்த மயி பேசினார்.