பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
11:04
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு சொந்தமான திருக்குளம், போதிய பராமரிப்பின்றி, மாசடைந்து வருவதால், அதை உடனடியாக சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். தெப்ப உற்சவம் ஸ்ரீபெரும்புதூரில், பழமை வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அருகில், இரண்டு ஏக்கர் பரப்பளவில், திருக்குளம் உள்ளது. இக்குளத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து, சிங்கமுக கால்வாய் மூலம் தண்ணீர் விடப்படுகிறது. உபரி நீர் வெளியேறவும் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. திருவிழா காலங்களில், பல்வேறு பகுதிகளில் இருந்து, கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள், இக்குளத்தில் நீராடுவர். பிரம்மோற்சவம் நிறைவு நாட்களில், திருக்குளத்தில், நான்கு நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். அப்போது, ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். குளத்தின் நான்கு கரைப் பகுதியிலும், குடியிருப்புகள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. பக்தர்கள் ஓய்வெடுக்க, திருக்குளத்தின் அருகே, மண்டபம் அமைக்கப்பட்டு இருந்தது. நாளடைவில், மண்டபம் தனியார் வசம் சென்றது. குளம் மாசுபடுவதை தடுக்க, கோவில் நிர்வாகம் சார்பில், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. ஆனால், போதிய பராமரிப்பில்லாத காரணத்தால், சுற்றுச்சுவர் சிதிலமடைந்து உள்ளது. புனிதமாக கருதப்பட்டு வந்த குளத்தில், சுற்றுப் பகுதியில் வசிப்பவர்கள், துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால், குளத்து நீர் மாசடைந்து வருகிறது.
தூர்ந்த கால்வாய்: மேலும், ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து குளத்திற்கு வரும், சிங்கமுக கால்வாய், தூர்ந்து விட்டதால், குளத்திற்கு, தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. திருவிழா காலங்களில் மட்டும், பொதுபணித் துறையினர், இதை தற்காலிகமாக சீரமைக்கின்றனர். எனவே, மாசடைந்து வரும் கோவில் குளத்தை தூர்வாரி, உயரமான சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும், சிங்கமுக கால்வாய் சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.