பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
02:04
உண்மையையும், உழைப்பையும் இரு கண்களென போற்றி வாழும் விருச்சிக ராசி அன்பர்களே!
இந்தமாதம் உங்கள் ராசிக்கு, ஆறாம் இடத்தில் அமர்வு பெறுகிற ஐந்து கிரக சேர்க்கையில் சூரியன், செவ்வாய், புதன், கேதுவும், ஏழாம் இடத்தில் உள்ள குருவும் அவரவர் பங்கிற்கு நல்ல பலன்களைத் தருகின்றனர். பிறர் மனம் கவரும் வகையில் போக்கை மாற்றிக் கொள்வீர்கள். பணவரவு அதிகம் இருக்கும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். தம்பி, தங்கைகளுக்கு மங்கல நிகழ்ச்சி நடத்துவதற்கான முயற்சி நற்பலனைத் தரும். வீடு, வாகன வகையில் கிடைக்கிற இப்போது இருக்கிற வசதி தொடரும். புத்திரர்கள், உங்கள் அன்பு நிறைந்த கண்டிப்பில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து ஓரளவுக்கு ஒத்துழைப்பு தருவர். பூர்வ சொத்தில் தாராள பணவரவு கிடைக்கும். புதிய சொத்து வாங்க சிலருக்கு யோகம் உண்டு. எதிரிகள், உங்களின் மதிப்பு மிகுந்த வாழ்வு முறையை பார்த்து தொந்தரவு தராமல் விலகுவர். உடல்நிலை நன்றாக இருக்கும். கணவன், மனைவி இடையே சுயகவுரவ சிந்தனையால் கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வதால் மட்டுமே ஒற்றுமை சீராக இருக்கும். நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் நிதான அணுகு முறை நல்லது. தொழிலதிபர்கள் அதிக மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளைச் செய்வர். அரசு சார்ந்த உதவி எளிதாக கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகி உபரி வருமானம் காண்பர். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும்.குடும்பப் பெண்கள், கணவரைப்பற்றி பிறர் சொல்லும் அவதூறுகளின் உண்மைத்தன்மை உணர்ந்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற சண்டையைத் தவிர்க்கலாம். பணிபுரியும் பெண்கள், திறமையாக செயல்பட்டு நிர்வாகத்திடம் நன்மதிப்பு, சலுகை பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள், உற்பத்தியை அதிகரிக்க, நவீன தொழில் கருவிகள் வாங்க அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஒத்துழைப்பினால் ஆதரவாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் சீரான லாபம் கிடைக்கும். மாணவர்கள் நல்ல தேர்ச்சிவிகிதம் பெறுவர்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் கணவன், மனைவி கருத்து வேறுபாடு நீங்கும்.
உஷார்நாள்: 15.4.13 இரவு 7.15- 18.4.13 காலை 6.46 மற்றும் 12.5.13 இரவு 2.38-14.5.13 முழுவதும்.
வெற்றி நாள்: மே 1,2,3
நிறம்: மஞ்சள், வெள்ளை
எண்: 3,6