பதிவு செய்த நாள்
12
ஏப்
2013
10:04
தமிழகம் முழுவதும் நிதி வசதி உள்ள கோவில்களில், தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட, சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்படி, கோவில் செயல் அலுவலர்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை, உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு, வரும் 14ம் தேதி, கொண்டாடப்படுகிறது.
இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடும்படி, அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அன்று, அனைத்து கோவில்களின் நுழைவு வாயிலில், வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள் கட்டப்படும்; சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவில் நிதி வசதியை பொறுத்து, கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், ஆன்மிக சொற்பொழிவு, மாணவர்களுக்கிடையே திருவாசகம், தோவரம், திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி போன்றவற்றுக்கு, ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுண்டல், புளியோதரை, பொங்கல் போன்றவற்றை, பிரசாதமாக வழங்கலாம் என, கூறியுள்ளோம். எதிர்ப்பு இல்லாத கோவில்களில், விளக்கு பூஜைகள் நடத்தலாம். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -