பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
01:04
மதுரை அழகர்கோவில் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமியையும், அழகர்மலையானையும், குல தெய்வமாகக் கொண்டாடும் மக்கள் ஆண்டுதோறும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு ஆட்டுக்கிடாய் வெட்டி படையலிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். சித்திரை திருவிழா துவங்கியதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கள்ளழகருடன் இரண்டறக்கலந்து சிறப்பாகவும், உன்னதமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் கொண்டாடுவதை வாழ்க்கையின் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா துவங்கியதும் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், 15 நாட்களுக்கு முன்பே கூட்டு வண்டிகளில் குடும்பத்துடன் புறப்படுகின்றனர். கூட்டு வண்டியில், பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக கருப்பு நிறம் கொண்ட ஆட்டுக்கிடாய், வண்டி மாட்டுக்கு தேவையான வைக்கோல், புண்ணாக்கு, சமையல் பொருட்கள், விறகு உள்ளிட்டவைகளுடன் அழகர்கோவில் நோக்கி பயணிக்கின்றனர்.
அழகர்கோவில் வந்ததும், பதினெட்டாம்படியானுக்கு கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக கோயிலில் இருந்து கள்ளழகர் புறப்படும்போது, கூடவே கூட்டு வண்டிகளில் மக்கள் பின் தொடர்ந்து பயணிக்கின்றனர். இரவு நேரங்களில் ஆங்காங்கே தங்கியிருந்து, கள்ளழகர் அசைந்தாடி வரும் அழகை கண்டு பரவசமடைகின்றனர். திருக்கண் மண்டபங்களில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு சர்க்கரை தீபம், மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவதை பெருமையாக கருதுகின்றனர்.காலச்சக்கரத்தின் மாற்றம் காரணமாக, கூட்டு வண்டிகளில் வருவோர் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைந்து விட்டது. கூட்டு வண்டிக்கு பதிலாக, மினி வேன்களில் அழகர்கோவிலுக்கு குடும்பத்துடன் வரும் பழக்கம் வந்துள்ளது. அதுவும், ஆட்டுக்கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றியதும், அன்றைய தினம் இரவே தங்களது ஊர்களுக்கு புறப்படும் நிலையில் பலர் உள்ளனர். எனினும், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்த மக்கள் கள்ளழகரை, வேன்களில் பின் தொடர்ந்து, வழிபாடு நடத்தி வருகின்றனர்.மதுரை பனங்காடியை சேர்ந்த பெரியகருப்பன், 66, பாட்டன், பூட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து கூட்டு வண்டியில் அழகர்கோவில் வருவது வழக்கம். இவ்வழக்கம் என் தலைமுறையுடன் முடிந்து விட்டது. மழை இல்லை. கால்நடைகளுக்கு தீவனம் இல்லை. பஞ்சம் பிழைக்க வழியில்லாததால் கூட்டு வண்டிகளும் இடம் பெறவில்லை, என்றார் ஆதங்கத்துடன்.திருச்சி மணப்பாறையை சேர்ந்த கருப்பன், 65, பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியும், அழகர்மலையானும் எங்களுக்கு குல தெய்வம். திருச்சியில் இருந்து கூட்டு வண்டியில் அழகர்கோவில் வருவோம். அப்போது சாலையில் போக்குவரத்து நடமாட்டம் குறைந்திருக்கும். இப்போ நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் பறக்கின்றன. இதனால் கூட்டு வண்டிக்கு வழியில்லை, என்றார் ஏக்கத்துடன்.காலச்சக்கரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும், மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோயிலும், சித்திரைத் திருவிழாவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. சைவமும், வைணவமும் இணையும் ஆன்மிக விழாவாக சிறப்புற்று வருகிறது.