பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
01:04
கல்யாணம் என்றால் விருந்து இல்லாமலா...மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? இந்த கட்டுரையை படித்து விட்டு, இம்முறை அவசியம் விருந்து சாப்பிட செல்லுங்களேன்...மதுரை சித்திரை திருவிழாவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்காக, 13 ஆண்டுகளாக தடபுடல் விருந்து பரிமாறப்படுகிறது. ஏற்கனவே, கோயிலில் ஆயிரக்கணக்கானோருக்கு விருந்து வழங்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக, சில ஆண்டுகளாக, கோயிலில் வழங்கப்படுவதில்லை. விருந்துக்கான ஏற்பாடுகளை, முருகன் பக்த சபை தலைவர் சாமுண்டி விவேகானந்தன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். யாரிடமும் நன்கொடை கேட்டு செல்வதில்லை. ஏராளமானோர் திருக்கல்யாண விருந்திற்காக அரிசி, காய்கறிகள், எண்ணெய் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்து விடுகின்றனர். அதை வைத்து திருக்கல்யாணத்திற்கு முதல் நாள், விருந்து சமைக்கும் பணி துவங்கி விடும். நூற்றுக்கணக்கான பெண்கள் வீட்டிலிருந்து அரிவாள்மனை, கத்தியுடன் வந்து, காய்கறிகளை நறுக்கி கொடுக்கின்றனர். சிலர், அரிசியை கழுவி சாதம் வடிக்க உதவுகின்றனர். சிலர், சமையல் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
இந்தாண்டு திருக்கல்யாண விருந்து குறித்து, சாமுண்டி விவேகானந்தன், ஏப்., 22ம் தேதி இரவு, மாப்பிள்ளை அழைப்பு விருந்தாக ஆறாயிரம் பேருக்கு கேசரி, பொங்கல், சாம்பார், வடை பரிமாறப்படும். திருக்கல்யாணத்தன்று காலை 8 மணி முதல் விருந்து வழங்கப்படும். சர்க்கரை பொங்கல், சாம்பார், தக்காளி, தயிர் சாதம், தண்ணீர் பாக்கெட், வாழைப்பழம் தட்டில் வழங்கப்படும். இதில், 50 ஆயிரம் பேர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்களே முன்வந்து, விருந்திற்கான பொருட்களை வழங்கி விடுகின்றனர். நாங்கள் வெறும் கருவிகளாக இருந்து நண்பர்கள், பக்தர்களுடன் இணைந்து சமைத்து பரிமாறுகிறோம், என்றார். விபரங்களுக்கு, 94424 08009