பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
01:04
ஆடுவோம்.... பாடுவோம்... கொண்டாடுவோம்..: மதுரை மக்களின் மண்வாசனை மாறாத மரபுகள் தான், சித்திரை திருவிழாவை பிற விழாக்களிலிருந்து தனித்துவம் பெறச் செய்தது. மதுரையின் ஆட்டமும், பாட்டமும், நோட்டமும், நாட்டமும், கூட்டமும்... தமிழகத்தின் ஏன், உலகின் வேறு எந்த பகுதியின் விழாக்களிலும் இருக்காது. அது தான், சீரும், சிறப்பும் நிறைந்த சித்திரை திருவிழாவின் மற்றொரு அடையாளம்.விழா தொடர்பான ஆன்மிகத் தகவல், அனைவரும் அறிந்ததே. அதைக் கடந்து, சித்திரையில் மதுரை வாசிகளின் நாடித்துடிப்பு எப்படி இருக்கும் என்பதை, இப்படித்தான் இருக்கும் என, அறிந்த போது, இன்று அல்ல, என்றுமே மதுரையின் சித்திரை திருவிழாவுக்கு மவுசு குறையாது.சரிவாங்க, நம்ம ஆளுங்க கொண்டாட்டத்தை பார்க்கலாம்...கள்ளழகர் வருவதற்கு முன்பே, அவர் நாமம் சுமந்த நெற்றியுடன் வலம் வருவோரை மதுரை முழுக்க பார்க்கலாம். அது அலுவலகமாகட்டும், பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும், நாமம் வரைந்த நெற்றியுடன் நடமாடுவோர் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். என்ன கோவிந்தா... சாப்பிட்டீங்களா கோவிந்தா... என, ஐயப்பனின் சரண கோஷம் போல, கோவிந்தா கோஷம், சித்திரை முழுக்க மதுரையில் ஒலிக்கும். தெரு, சந்து, வீதி, ரோட்டில் உள்ள அனைத்து சங்கங்கள், மன்றங்களின் அவசர கூட்டம் கூடும்.
ஏம்ப்பா... இந்த முறை அழகரை அசர வெக்கணுமப்பா... காசு கூட, குறைய வந்தாலும், விழாவை வெயிட்டா பண்ணனுமப்பா... என, பெருசுகள் முன்மொழிய, சரவெடி, பேண்ட் வாத்தியம், தப்பு இறக்கி, ஆண்டிபட்டி அடி இறக்குனா... ஏரியாவே அலறணும்... என, இளசுகள் துடிக்கும். சரியப்பா... உங்க ஆசைய ஏன் கெடுப்பானே... கலக்கிடுவோம்... நீர், மோர் பந்தல், கொட்டகை, தோரணம் எல்லா செலவையும் கணக்குப் போட்டு பண்ணிடுவோம்ப்பா... என, பொருளாளர் தெரிவிக்க; சித்தப்பு... அழகரு புண்ணியத்துல நல்லா இருக்கேன்... அவருக்குச் செய்யாம, யாருக்குச் செய்யப்போறேன். செலவை பார்க்க வேணாம்... பெரியவங்களா பாத்து செய்யுங்க; பணத்தை நான் தர்றேன்... என, நன்கொடையாளர்கள் பட்டாளம் படையெடுக்கும்.அடுத்த சில நாட்களில் தன் பகுதியை கடக்க வரும், கள்ளழகரை வரவேற்கும் ஏற்பாடுகள் ஜரூராய் தொடங்கிவிடும். ஆண்கள் வட்டாரம் இப்படி என்றால், பெண்கள் தரப்பில் அதை விட உற்சாகம். விழா கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல், தினமும் அம்பாள்சுவாமி தரிசனம் தேடி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பக்தி மலர்களின் படையெடுப்பு நடக்கும். கடையில் இல்லாத மல்லிகையை, மங்கையரின் கூந்தலில் தான் பார்க்க முடியும். 10ம் நாள் திருவிழாவான திருக்கல்யாண வைபவமாக இருக்கட்டும், 11ம் நாள் தேரோட்டமாகட்டும், அழகர் ஆற்றில் இறங்கும் தினமாகட்டும் கூடும் கூட்டத்தில், பெரும்பான்மையோர் பெண்கள் தான். நித்திரை இல்லாமல் சித்திரை கொண்டாட்டத்தில் முத்திரை பதிக்கிறார்கள், நம்மூர் பெண்கள்.
விழாவை களைகட்டச் செய்யும் குட்டீஸ்களிடம் போவோம்... அப்பா... அழகரு எப்போப்பா வருவாரு... அவங்க ஏம்ப்பா... தண்ணீரை பீச்சி அடிக்கிறாங்க... என, அப்பாவியாய் கேள்வி கேட்கும் குழந்தைகளாகட்டும், ஆட்டம், பாட்டத்தின் நடுவே களமிறங்கி தானும் ஆடி, களத்தை களை கட்டும் ஆர்ப்பாட்ட குழந்தைகளாகட்டும், பார்க்கவே அத்தனை அழகு. கிராமத்தில் இருந்து குழந்தைகளை அழைத்து வந்து, தோளில் ஏற்றி, தூரத்தில்அழகர் ஆற்றில் இறங்கும் காட்சியை காட்டுவார் தந்தை. தன்னால் காண முடியாவிட்டாலும், தன் வாரிசு கண்டு மகிழ்வதில் அந்த அப்பாவுக்கு அத்தனை திருப்தி. இப்படி, ஒவ்வொரு தரப்பும் தனக்குரிய பாணியில் சித்திரையை, சீரும், சிறப்புமாய் கொண்டாடுவர். அதிகாலையில் ஆற்றில் இறங்கும் அழகரை தரிசிக்க, நெரிசலில் மிதந்து நேரில் ஆஜராகும், அந்த அலைகடல் கூட்டம் ஒன்றே போதும், மதுரையில் சித்திரை விழாவின் மகத்துவத்தை உணர்த்த!