பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
01:04
சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்குதல்... எல்லோமே அழகுக் காட்சிகள் தான். திருவிழா கொண்டாட்டமாக, அம்மன் சன்னதியில் இருந்து திருவிழா முடியும் வரை, நான்கு மாசி வீதிகளை சுற்றி ஆடிக் கொண்டே வரும், கோலாட்ட குட்டீஸ்களை சொல்லாமல் இருக்க முடியுமா?சித்திரை திருவிழாவின் சின்ன சின்ன சந்தோஷங்கள் இவை. பாவாடை தாவணி ம(ø)றந்து போன நிலையிலும், திருவிழா முடியும் வரை, வண்ணத் தாவணிகளில் அம்மனைப் போல அலங்கரித்துக் கொண்டு அழகுச் சிறுமிகள் ஆடிவருவதை காண்பதே ஓர் அழகு. பெண்ணாய் பிறந்ததாலும், பெண்ணைப் பெற்றதாலும் பெருந்தவம் செய்ததைப் போல... அன்னையர் கூட்டம் சிறுமிகளின் பின்னால் பெருமிதத்துடன் செல்கின்றனர். தினமும் மாலை ஏழு மணிக்கு துவங்கும் ஆட்டம், இரவு 11 மணி வரை நீளும்.
பவுடர் பூசிய முகங்கள் வியர்வையில் கசிய... அலுக்காமல், சலிக்காமல் அலட்டிக் கொள்ளாமல் புன்னகையை சுமந்து பொற்குடங்களாய் வலம் வருகின்றனர், சிறுமிகள். எதற்காக இந்த ஆட்டம்... அம்மனிடம் வேண்டுதல் என்றனர். ஹரிணி 8 ஆண்டுகளாகவும், அபிராமி 4 ஆண்டுகள், பிரதியுக்ஷா, குருஜெயா, அருணாதேவி 2 ஆண்டுகளாகவும் ஆடி வருகின்றனர். இரண்டு வயது முதல் 15 வயது வரையிலான சிறுமிகள் அம்மனுக்கு முன் ஆடிச் செல்கின்றனர். கால்களின் அசைவிற்கு ஏற்ப, தாளம் தவறாமல் கோலாட்டம் அடித்து அணிவகுத்து செல்வது அழகோ... அழகு. எதற்காக இந்த வேண்டுதல்... சில அம்மாக்களிடம் கேட்ட போது, வித்யா, சித்ராதேவி, விசாலாட்சி கூறியது, ஆச்சர்யப்பட வைத்தது. அம்மனை பார்ப்பதற்கே ஆயிரம் பிறவி எடுக்க வேண்டும். அதிலும் அம்மன் ஆட்சி செய்யும் ஊரில் பிறப்பதற்கு தவம் செய்திருக்க வேண்டும். நாடு நலம் பெற... நல்லோர் வாழ... அம்மனை வேண்டி, எங்கள் பிள்ளைகளை ஆடிப் பாட வைக்கிறோம், என்றனர். மதுரையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த ஈஸ்வரி... மீண்டும் மதுரைக்கு வரவேண்டுமென வேண்டுதல் செய்தாராம். வேண்டுதல் பலிக்கும் தருவாயில், பேரப்பிள்ளைகள் சாருமதி, பாரதிராஜா, உதயசங்கரை முதன்முறையாக மீனாட்சி, கிருஷ்ணன், சிவன் வேடமணியச் செய்து வீதி வலம் வரச் செய்தார். பசுமை நிற பேரெழிலாம் மீனாட்சியாய் வேடமணிந்த சாருமதி... கிளிய கை மாற்றி ஆண்டாளாக மாற முயற்சிக்க... நீ மீனாட்சி என்று பாட்டி ஈஸ்வரி செல்லமாய் நினைவுபடுத்தினார்.