மதுரை: மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று, (ஏப்.,24ல்) தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்.,24ல் நடைபெற்றது. இதி்ல் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தேரோட்டத்தின் வீதி உலா இன்று(ஏப்.,24) காலையில் துவங்கியது. மாசி வீதிகளில் வலம் வரும் தேரோட்டத்தை காண்பதற்கு சுற்றுப்பகுதி கிராமமக்கள் மற்றும் மதுரை மக்கள் திரளாக கூடியிருந்தனர். லட்சக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.
மீனாட்சி சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி வருகின்றனர். ஊர் கூடித்தேர் இழுத்தது போல என்னும் சொல்வழக்கு நம் மண்ணில் காலம் காலமாக வழங்கி வருகிறது. சமூகத்தில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக நடைபெறும். ஒற்றுமையை வலியுறுத்தும் இவ்விழா நம் பண்பாட்டுக் கலைகளின் அடையாளமாகத் திகழ்கிறது.