பதிவு செய்த நாள்
22
ஏப்
2013
10:04
செஞ்சி: எருமை கிடாக்களை, காளியம்மனுக்குப் பலி கொடுத்து, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் விழா கொண்டாடினர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவகள், காளியம்மனுக்கு விழா எடுத்தனர். கடந்த 19ம் தேதி துவங்கிய விழாவில், முதல் நாளில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு ஆட்டு கிடாய்களை பலி கொடுத்தனர். இரண்டாம் நாள் இரவு, மைதா, ரவையால் ரொட்டி சுட்டு, காளியம்மனுக்குப் படையல் செய்தனர். மூன்றாம் நாள், நேற்று காலை 9:30 மணிக்கு, இரண்டு எருமை கிடாக்களை பலி கொடுத்தனர். கிடாவின் கழுத்தில் இருந்து கொட்டிய ரத்தத்தை, பெரிய தாம்பாளத்தட்டுக்களில் பிடித்து காளிக்கு படையல் வைத்தனர். தட்டுக்களில் பிடித்த ரத்தத்தை, சாமி வந்து ஆடிய பூசாரிகள் குடித்தனர். கடைசி நாளான இன்று, இரவு 12:00 மணிக்கு, 7 பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, பொங்கல் வைக்க உள்ளனர். செஞ்சியைச் சேர்ந்த 200 நரிக்குறவர் இனக்குடும்பத்தினர் பங்கேற்றனர். வெளியூர்களில் இருந்தும் உறவினர்களை வரவழைத்திருந்தனர். இந்த விழாவை, 300 ஆண்டுகளுக்கும் மேலாக, நடத்தி வருவதாக, அவர்கள் தெரிவித்தனர்.