பதிவு செய்த நாள்
22
ஏப்
2013
10:04
மதுரை: மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டியில், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூலிகைகளால் வரையப்பட்ட ராமாயண ஓவியங்கள், பராமரிப்பு இன்றி, சிதைந்து வருகின்றன. இதே பகுதியில் காணப்படும், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்பதுகைகளுக்கும், இதே நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை - மேலூர் ரோட்டில் உள்ள நரசிங்கம்பட்டி, 200 வீடுகளைக் கொண்டது. அழகர்கோவில் தேரோட்டத்தில், முக்கியத்துவம் தரப்படும் இடங்களான, வல்லாளபட்டி, தெற்குத் தெரு, பாளையபட்டு ஆகிய வற்றுடன், நரசிங்கம்பட்டியும் ஒன்று.
சிதைவு: இப்பகுதியைச் சேர்ந்த கிராமங்களின் பிரச்னைகளை பேசித் தீர்க்க, 17ம் நூற்றாண்டில், சாவடி கட்டப்பட்டது. "சித்திரச் சாவடி என, அழைக்கப்படும் இங்கு, ஏராளமான ராமாயண காட்சிகள், இயற்கை ஓவியங்களாக தீட்டப்பட்டு உள்ளன. அழகர்கோவில் மண்டபம், ராமநாதபுரம் அரண்மனைகளில் காணப்படும் ஓவியங்களை, இவை ஒத்திருக்கின்றன. "கடவுள் முன்னிலையில் பிரச்னைகளை தீர்க்கிறோம் என்பதைக் காட்டுவதற்காகவே, ராமாயண ஓவியங்கள் வரையப்பட்ட சாவடியில் அமர்ந்து, ஊர் பெரியவர்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.காலப்போக்கில், முக்கியத்துவம் இழந்த சாவடி, சிதைந்து வருகிறது. பாதி மேற்கூரை பெயர்ந்து, ஓவியங்கள் முழுவதும் அழிந்து விட்டன. கூரை பெயராத இடத்தில் மட்டும், சிதைந்த நிலையில் ஓவியங்கள் காணப்படுகின்றன.பழமையானது இவ்வூர் என்பதற்கு அடையாளமாக, அருகே உள்ள பெருமாள் மலையின் கீழ், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகள் காணப்படுகின்றன; இவையும் சிதைந்து வருகின்றன.
கற்கால கல்லறைகள்: வரலாற்று ஆய்வாளர் வேதாசலம் கூறியதாவது: இக்கல்லறைகள், கி.மு., 1,000க்கும், கி.பி., 300க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை. அக்கால மனிதர்கள் இறந்ததும், அவர்களது ஆன்மா அமைதி அடைந்து, "வாழ்கிறவர்களை வளப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், வகை வகையான கல்லறைகள் அமைத்து உள்ளனர். பூமிக்கடியில் பலவகைக் கற்களை கொண்டு அமைக்கப்படும், கல் பதுக்கை; பூமியில் மேற்பரப்பில் கற்களை வைத்து கட்டப்படும், கல்திட்டை போன்றவை, இங்கு இருக்கின்றன. இறந்தவர்களை புதைத்த இடத்தில், பெரிய கற்களை நட்டு வைத்துள்ளனர். இவற்றுக்கு, "குத்துக்கல் என்று பெயர்.இவ்வாறு, அவர் கூறினார்.
பரிந்துரை: இந்த இடத்தைப் பார்வையிட்ட தொல்லியல் துறை உதவி இயக்குனர் கணேசன் கூறுகையில், ""முன்பு நாடோடிகளாக இருந்த மனிதர்களின் கூட்டம், சில இடங்களில், விவசாயம் செய்து நிரந்தரமாக தங்கியுள்ளனர். அதுபோன்ற, "செட்டில்மென்ட் இங்கு இருந்துள்ளது. இதற்கு அடையாளமாக இங்கு, கல் பதுக்கைகள், முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. இவற்றை பாதுகாக்க, அரசுக்கு பரிந்துரை செய்வோம், என்றார். இப்பகுதியை கண்டுபிடித்த ஆய்வாளர் ராஜாராம் மற்றும் தானம் அறக்கட்டளை இணைந்து, பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாக்கும் முயற்சியில், இறங்கி உள்ளன.
பாதுகாப்போம்: ஊராட்சித் தலைவர் ஓடையன் கூறுகையில், ""இச்சின்னங்கள் உள்ள இடம், வனத் துறைக்கு சொந்தம் என்பதால், அவர்களிடம் அனுமதி பெற்று, சின்னங்களை பாதுகாப்போம், என்றார். ஜெயப்பிரகாஷ் கூறுகையில், ""இப்போது தான் எங்களுக்கே இந்த இடத்தின் முக்கியத்துவம் புரிகிறது. ஏதோ, கற்கள் இங்கு கிடப்பதாகத் தான் நினைத்திருந்தோம். இனி, கிராமத்தினர் இணைந்து, இச்சின்னங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவோம், என்றார். அர்ச்சுண குமார் கூறுகையில், ""பழங்கால சின்னங்களின் அருமை புரியாமல், பலர் சேதப்படுத்தி உள்ளனர். இனிமேல் இளைஞர்களும் சேர்ந்து, அவற்றை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவோம், என்றார். பழமையான இச்சின்னங்களை பாதுகாக்க, அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை சுற்றுலாத் தலமாகவும் மாற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.