பதிவு செய்த நாள்
23
ஏப்
2013
11:04
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே கொழுமம் மாரியம்மன் திருவிழா தொடங்குவதால், அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டத்துக்குளம் கொழுமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா இந்த வாரம் துவங்கவுள்ளது. கோடைகாலத்தில் நடக்கும் இந்த விழாவில் ஆண்டுதோறும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இதை தவிர்க்க போதிய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடிநீர்: இரண்டு கி.மீ, அகல பரப்பில் அமைந்துள்ள கொழுமத்தில் பத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. திருவிழாவின் போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பர். அமராவதி ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாத நிலையில் மக்கள் குழாய் நீரை அதிகளவில் பயன்படுத்துவர். இவர்களின் தாகம் தணிக்கவும், தண்ணீர் தேவையை ஈடுகட்டவும் 10 இடங்களில் "சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யவேண்டும்.
பன்றிகளால் சுகாதாரக்கேடு: அமராவதி ஆற்றங்கரையில் பல இடங்களில் குடில்கள் அமைத்து பன்றிகள் வளர்த்து வருகின்றனர். இவைகள் இங்குள்ள தெருக்கள் கோவில், சந்தை மற்றும் முக்கிய இடங்களில் உலா வருவதுடன், சாக்கடைகளில் தங்கி விடுகின்றன. இதே நிலை திருவிழா நாட்களில் நீடித்தால், மக்கள் சுகாதாரக்கேட்டால் நோய்தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் திருவிழா நடக்கும் நாட்களிலாவது, பன்றிகளை ஊர்ப்பகுதிக்குள் விடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பார்க்கிங்: திருவிழா நடக்கும் முக்கிய நாட்களில் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்லும். கோவில் பகுதியில் போக்குவரத்து இடைஞ்சல் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க தற்காலிக "பார்க்கிங் வசதி செய்யப்பட வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கோவில் வளாகத்தின் முன் ஆண்டுமுழுவதும் இறைச்சி கடைகள் நடந்து வருகின்றன. திருவிழா நாட்களிலும் இந்த கடைகள் செயல்பட அனுமதித்தால், சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன்,கோவில் வளாகம் முழுவதும் துர்நாற்றம் ஏற்படும். திருவிழா நாட்களில் இக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்நடவடிக்கையினை ஊராட்சி நிர்வாகத்தினரும், காவல் துறையினரும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.