பதிவு செய்த நாள்
26
ஏப்
2013
10:04
கூடலூர்: தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில், சித்ரா பவுர்ணமி விழா, எவ்வித கெடுபிடிகளும் இன்றி நடந்தது. தேனி மாவட்டம், கூடலூர் அருகே, தமிழக கேரள எல்லையான பளியன்குடி மலை உச்சியில் அமைந்துள்ளது, மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். இதில், தமிழக கேரள பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள். நேற்று அதிகாலை 5.30 மணியில் இருந்தே கேரளா குமுளியில் இருந்து, 15 கி.மீ., தூரமுள்ள கோயிலுக்கு ஜீப்பிலும், நடந்தும் பக்தர்கள் சென்றனர். பிளாஸ்டிக் பைகள், கேன்களை பறிமுதல் செய்யப்பட்டன. கண்ணகி அம்மன், பச்சைப் பட்டு உடுத்தி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கண்ணகி கோயிலில் தமிழக பூஜாரி பாலாஜி அர்ச்சனை செய்தார். இந்த ஆண்டு சுதந்திரமாக பெண்கள் பொங்கல் வைத்தனர். பெண்களுக்கு மங்கல நாண், வளையல் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு வழிபாடும் பூமாரி விழாவும் நடந்தது. பளியன்குடி வனப்பகுதி வழியாகவும், தமிழக பக்தர்கள் அதிகளவில் நடந்து வந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கூடலூரில் இருந்து பளியன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன. கோயில் வளாகத்தில் இரண்டு இடங்களில், புதிதாக "இடிதாங்கி வைத்திருந்தனர். கரடிக்குழி அருகே 50 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொல்பொருள் ஆய்வு: மங்கலதேவி கண்ணகி கோயில் வரலாறு குறித்து, தொல்பொருள் ஆய்வுத் துறை கண்காணிப்பாளர் உமா மகேஸ்வரி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். கோயில் வளாகத்தில் உள்ள கல்வெட்டு, வரலாற்றை கூறும் சான்றுகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். எல்லைப்பகுதி குறித்து ஏற்கனவே பிரச்னை இருப்பதால், இந்த ஆய்வு ரகசியமாக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.