பதிவு செய்த நாள்
26
ஏப்
2013
10:04
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில், நேற்று அதிகாலை 3 மணிக்கு பூப்பல்லக்கில் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க "கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.,20ம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது. ஏப்., 24ல் காலை அபிஷேகம் நடந்தது. பின்னர் நேற்று அதிகாலை 3மணிக்கு பெருமாள் வேல், கம்புடன், கோடாரி கொண்டையிட்டு கள்ளழகர் கோலத்துடன் புஷ்பப்பல்லக்கில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான தீவட்டிகள் வெளிச்சத்தில், வான வேடிக்கைகள், மேள, தாளம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் "கோவிந்தா கோஷத்துடன் கோலாகலமாக வைகை ஆற்றில் இறங்கினார்.முன்னதாக கோயில் வாசலில் காவல் தெய்வம் கருப்பண்ணசாமியிடம், பெருமாள் விடை பெற்றும் வைபவம் நடந்தன. அழகர் மஞ்சள் பட்டு உடுத்தி, வெள்ளி பாத்திரத்தில், பால் அன்னம் சாப்பிட்ட படி வந்தார். இதனால் "மிதமான மழை பெய்வதுடன், விவசாயம் செழித்து மக்கள் சுகமுடன் இருப்பார்கள், என்று தேவஸ்தான அர்ச்சகர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று காலை 8மணிக்கு பெருமாள் தல்லாகுளத்தில் இருந்து குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பீச்சாங்குழல் எனும் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீச்சியடித்து அழகரை வரவேற்றனர்.
பின்னர் 300க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் சேவை சாதித்து, பகல் 2மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் அமர்ந்து, பரமக்குடியின் முக்கிய வீதிகளின் வழியாக காக்காத்தோப்பு பெருமாள் கோவிலை அடைந்தார். இரவு ஆயிரம் பொன் சப்பரம் வைகை ஆற்று மணலில் பக்தர்களால் 3 கி.மீ., தொலைவில் உள்ள காக்கா தோப்பு பெருமாள் கோவிலை சென்றடைந்தது. விழாவில் சுற்று வட்டார கிராம, பரமக்குடி, ராமநாதபுரம் மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். ஏற்பாடுகளை தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி பாபுஜி, டிரஸ்டிகள் தியாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
*குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது.
*திருவிழாவை ஒட்டி பரமக்குடி நகர் முழுவதிலும் பல்வேறு மண்டகப்படிகளில் நீர் மோர், பானகங்கள், அன்னதானம் வழங்கப்பட்டன.
*நேற்று பகல் 1மணிக்கு பெய்த மழையால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
*இன்று இரவு 7மணிக்கு மண்டூக மகரிஷி சாப விமோசனமும், விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சியும் நடைபெறும்.