பதிவு செய்த நாள்
26
ஏப்
2013
10:04
குடகு: கர்நாடகாவின் வடக்கு பகுதியில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கிராமம் ஒன்றில் உள்ள புளிய மரத்தின் கீழ், சிறிது நேரமாவது அமர்ந்து தேர்தல் பிரசாரம் செய்கின்றனர்; இதனால் தாங்கள் வெற்றி பெறுவதாக அவர்கள் நம்புகின்றனர். கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின், ஹேமாரெட்டி என்ற இடத்தில், சுற்றிலும் சிமென்ட் திண்டுடன் கூடிய, புளிய மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் கீழ் சிறிது நேரம் அமர்ந்து, தேர்தல் பிரசாரம் செய்தவர்கள், வெற்றி பெற்றுள்ளதை அறிந்த பிற வேட்பாளர்கள், அந்த புளிய மரத்தின் கீழ், சிறிது நேரமாவது அமர விரும்புகின்றனர்.ஷிராஹட்டி மற்றும் ரோன் சட்டசபை தொகுதிகள், அதைச் சுற்றியுள்ள நகராட்சி, கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிடுபவர்களும், அந்த ராசியான புளிய மரத்தை விடுவதில்லை. வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு, தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து, புளிய மரத்தின் கீழ் அமர்ந்து விடுகின்றனர்.
அம்மாநிலத்தின் பிரபல அரசியல் தலைவர்களில் ஒருவர், எஸ்.எஸ்.பாட்டீல். அதிர்ஷ்டக்கார புளிய மரம் அமைந்துள்ள, கல்கேரி கிராமத்தை சேர்ந்தவர்; அவரை சந்திக்க வரும் பொதுமக்களை, அந்த புளிய மரத்தின் கீழ் சந்திப்பது தான் வழக்கம்.தன்னை சந்திக்க வருபவர்களுக்கு, அவர், தின்பண்டங்களும், டீயும் கொடுத்து உபசரிப்பதும் உண்டு. அந்த இடத்தையே தன் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கும், எஸ்.எஸ்.பாட்டீல் பயன்படுத்தியுள்ளார். போட்டியிட்ட தேர்தல்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றதால், அவருக்கு அதிர்ஷ்டம் தந்த புளிய மரம், இப்போது பலருக்கும், அதிர்ஷ்டம் வழங்கும் மரமாக கருதப்படுகிறது.கர்நாடக மாநில சட்டசபை தேர்தல், அடுத்த மாதம், 5ம் தேதி நடக்கிறது. அதில், போட்டியிடுபவர்கள், புளியமரத்தின் கீழ் அமர்வதை மட்டும் மறப்பதில்லை.