பதிவு செய்த நாள்
27
ஏப்
2013
10:04
கீழக்கரை: திருப்புல்லாணி பட்டாபிஷேக ராமர் கோயிலில், சித்திரை உற்சவத்தை முன்னிட்டு நேற்று நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கோயிலில் சித்திரை உற்சவ விழா, ஏப்., 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று சந்திரகிரகண பூஜை நிறைவடைந்ததும், காலை 5 மணிக்கு சுவாமிகள் ராமர், லட்சுமணர், சீதை தேரில் எழுந்தருளினர். அர்ச்சகர் ஜெயராம் பட்டர் தலைமையில் யாத்ரா பூஜை நடந்தது. காலை 10 மணிக்கு பக்தர்கள் தேர் இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் வலம் வந்து, மதியம் 12 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. மாலை 5 மணிக்கு தேரில் இருந்து இறங்கிய சுவாமிகள் ராமர், லட்சுமணர், சீதை, தேரை வலம் வந்து கோயிலை சென்றடைந்தனர். இரவு 9 மணிக்கு ராமர் தேர் தடம் பார்த்து வந்ததும் கொடி இறக்கப்பட்டு அனபெலி சாதிக்கப்பட்டது. இன்று சேதுக்கரையில் தீர்த்தம் சாதித்தல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர்கள் முனியசாமி(திருப்புல்லாணி), புல்லாணி(தாதனேந்தல்), லட்சுமி(ரெகுநாதபுரம்) கலந்து கொண்டனர். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.