பதிவு செய்த நாள்
27
ஏப்
2013
11:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில் கூடுதல் விலைக்கு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டது. இதை தட்டி கேட்டவர்களை கடை ஊழியர்கள் மிரட்டல் விடுத்தனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசாதம் விற்பனை செய்ய தனியாரிடம் டெண்டர் விடப்பட்டுள்ளது, இதில், ஐந்து ரூபாய்க்கு நூறு கிராம் அடங்கிய புளி சாதம், சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், போன்ற சாத வகைகளும், பத்து ரூபாய்க்கு லட்டு, முறுக்கு, எல்லடை, அதிரசம் போன்றவை துணி பையில் அடைக்கப்பட்டு, 30 ரூபாய்க்கு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அப்போது, பிரசாத ஸ்டாலில், ஐந்து ரூபாக்கு விற்க வேண்டிய சாத வகைகள், 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதை பக்தர்கள் தட்டி கேட்டனர். கடை ஊழியர்கள் மிரட்டல் விடுத்தனர்.தகவல் அறிந்த ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் சங்கர் பிரசாத கடை ஊழியர்களிடம் தட்டி கேட்டார், இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது, ஹிந்து முன்னணி தொண்டர்கள் ஒன்றாக திரண்டனர்.தகவலறிந்த கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி விசாரணை நடத்தி, கூடுதல் விலைக்கு பிரசாதம் விற்பனை செய்ய கூடாது என எச்சரித்தார். அதன் பின் ஹிந்து முன்னணி தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனாலும், தொடர்ந்து கூடுதல் விலைக்கு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டது.