கடலூர்: உலக நன்மை வேண்டி கடலூர் பிடாரி அம்மன் கோவிலில் 1008 குட அபிஷேகம் நடந்தது. உலக நன்மை வேண்டி பிரசித்திப் பெற்ற கடலூர் பாடலீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மனுக்கு 1008 குட சிறப்பு அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையொட்டி பக்தர்கள் நேற்று காலை கோவில் திருக் குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு 1008 குட சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், வேதபாராயணம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி, கோவில் செயலர் அலுவலர் கிருஷ்ணகுமார் முன்னிலையில், நாகராஜ குருக்கள், மகாதேவ குருக்கள், மகேஷ் குருக்கள் ஆகியோர் அபிஷேகம் செய்தனர். அபிஷேக ஏற்பாடுகளை காஞ்சி சங்கரா அறக்கட்டளை நிர்வாகி கிரி சீதாராமன், ஜெய் பிரசாந்த், ஸ்ரீவத்ஸன், உளுந்தூர்பேட்டை தாசில்தார் ரவீந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.