திருநெல்வேலி: பாளை.யில் வேங்கடரமண பாகவத சுவாமிகளின் 232வது ஜெயந்தி ஆராதனை துவங்கியது. தியாகபிரம்மம் அவர்களின் சீடரும், சங்கீத மேதையுமான வேங்கட ரமணபாகவத சுவாமிகளின் 232வது ஜெயந்தி ஆராதனை மற்றும் 25ம் ஆண்டு வெள்ளிவிழா பாளை.கிருஷ்ணன் கோயில் சவுராஷ்டிரா மகாஜன சபையில் நேற்று துவங்கியது. இதைமுன்னிட்டு வேங்கடரமண பாகவத சுவாமியின் திருவுருவப்படத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு மாடவீதிகளில் ஊர்வலம் நடந்தது. ஐ.ஐ.பி.இ.,பள்ளி தாளாளர் அனந்தராமன் தலைமை வகித்தார். டாக்டர் சவுந்திரராஜன், தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் ஜெகதீசன், தமிழ்நாடு பதிவுத்துறை அமைச்சு பணியாளர் சங்கம் மாநில பொதுசெயலாளர் அனந்தராமன் முன்னிலை வகித்தனர். வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி கமிட்டி பொருளாளர் ராஜாராம் வரவேற்றார். நிர்மலா குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். விழாவை ஸ்ரீமன் நாயகி சுவாமிகள் ஆன்மிக இளைஞர் எழுச்சி இயக்க தலைவர் ராமசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். மாடவீதிகளின் வழியாக வந்த ஊர்வலம் மீண்டும் கிருஷ்ணன் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். இன்று(3ம் தேதி) மதியம் 12.30 மணிக்கு, பாலக்காடு அகில இந்திய வானொலி முன்னாள் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அனைத்து வித்வான்கள் இணைந்து பங்கேற்கும் கனராக பஞ்சரத்ன கீர்த்தனை ஆராதனை நிகழ்ச்சி நடக்கிறது. 4ம் தேதி இரவு 7 மணிக்கு அக்கரை சகோதரிகளின் சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.