பதிவு செய்த நாள்
11
மே
2013
04:05
நம்பிக்கைதான் வாழ்க்கை. இறைவன் மீது நம்பிக்கை கொள்ளும் மனம் வெற்றி கொள்கிறது. உலகில் வினைப்பதிவுகளை தூண்டி துன்பங்களை தோற்றுவிப்பது கோள்கள். இவற்றை எதிர்கொண்டு வெல்லும் ஆற்றலை மனிதர்களுக்கு அளிப்பது மகா சக்தி. வீரமகள்: சிவனிடம் சக்யாகவும், விஷ்ணுவிடம் மகாலட்சுமியாகவும், பிரம்மனிடம் சரஸ்வதியாகவும், அனைத்து தேவர்களையும் ஊக்குவிப்பவளாக திகழ்பவள் ஸ்ரீ துர்க்கை.
ஸ்ரீ துர்க்கை என்றால், தமிழில் வீரமகள் என்பர். அனைத்து உயிர்களையும் அரணாக காப்பவள் என்று வடமாநிலத்தவர்கள் வணங்கி மகிழ்கின்றனர். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், தன்னை வழிபடும் பக்தர்களுக்கு துன்பங்கள் நேராமல் அரணாக நின்று காப்பவள் என்று பொருள் கொள்ளலாம்.
முழு முதற்பொருள்: கடவுளை அன்புமயமாக பாவனை செய்து, அவரை அன்பினால் அடையச் செய்யும் மார்க்கம் பக்தி மார்க்கம். பக்தி என்பது இறைவன் மீது அன்பு செய்ய பழகுதல். அரூபமாக எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும் கடவுள் மீது அன்பு செலுத்த இயலாது என்பதால், இந்து மதத்தில் உருவக்கடவுளை ஸ்தாபித்தனர். கடவுளை வழிபடுவதற்கும் விதிமுறைகள் உள்ளன. எங்கும் நிறைந்திருக்கும் முழு முதற்பொருளே அனைத்துமாக உள்ளது என்ற உணர்வுடன் வழிபட வேண்டும். அவன் நமக்குள்ளே உறைந்திருக்கிறான் என்பதை தியானத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். புறத்தோற்றத்தில் பார்க்கும் இறைவனை, பக்தியோடு வணங்கி நம் அகத்தில் அவரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
முக்தி: பக்தியில்லாத ஞானம் மனதில் வெறுமையை தோற்றுவித்து இறுதியில் மனசஞ்சலத்தையும், கவலையையும் தரும். அதேப்போன்று ஞானமில்லாத பக்தி, அறிவை அடிமையாக்கி, சுயநலத்தையும், கடும் பற்றையும் தோற்றுவிக்கும். பக்தியும், ஞானமும் இணைந்ததே, வாழ்க்கை பாதையை சீரமைத்து முக்தியை அளிக்கும். பாரினில் உயர்ந்தது பக்தி. அதை பற்றின பேருக்கு வரும் முக்தி என்ற சித்தர் பாடல் இதைத்தான் உணர்த்துகிறது. முக்தியே பக்தியின் பெரும் பயன் ஆகும். பக்தியின் இலக்கணம் எல்லா செயல்களையும், இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதும், இறைவனை மறக்கும் பொழுது மனம் துன்புறுதலும் ஆகும். இவர்களே முக்திபாதையில் பயணிப்பவர்கள் என்று கூறலாம். சக்தியின் வடிவான ஸ்ரீ துர்க்கைக்கு திருக்கோயில் அமைக்க அன்புநெறி டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலர்கள் எம்.கே. தாமோதரன், நளினி முடிவு செய்தனர். அதன்படி, திண்டுக்கல் வேதாத்திரி நகரில் ஸ்ரீதுர்க்கா கோயில் கட்டப்பட்டுள்ளது.
சிறப்பு: கோயில் சிறப்பு குறித்து நிர்வாக அறங்காவலர் தாமோதரன் கூறுகையில், தமிழகத்தில் துர்க்கைக்கு என்று தனிக்கோயில் இங்கு தான் அமைந்துள்ளது. பொதுவாக சிவாலயங்களில் வடக்கு கோஷ்டத்தில், சதுர்புஜங்களோடு மஹிசத்தின் மீது அமர்ந்து காட்சியளிக்கும் ஸ்ரீ துர்க்கையைதான் பக்தர்கள் வணங்கியிருப்பர். திண்டுக்கல் வேதாத்திரி நகரில் சிம்மத்தின் மீது அமர்ந்து வீரதிருமகளாகவும், தன்னை நாடிவரும் பக்தர்களின் துன்பங்களை தணிக்கும் கருணை கடலாகவும் ஸ்ரீ துர்க்கை அருள்பாலிக்கிறார்.
கும்பாபிஷேகம்: அன்னையின் திருப்பணிகள், நிறைவுற்று சித்திரை மாதம் 29 ம் நாள், (மே 12) ஞாயிறு அன்று காலை 6.30 லிருந்து 7 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் என்னும் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. முதற்கால யாக வேள்வி மே 10 ல் துவங்கியது. இரண்டாம் கால யாக வேள்வி மே 11 ல்(சனி) காலை 7.30 மணிக்கு துவங்குகிறது. ஏற்பாடுகளை அன்பு நெறி டிரஸ்ட்டியின் நிர்வாக அறங்காவலர் தாமோதரன், நளினி தாமோதரன் செய்து வருகின்றனர். திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் இருந்து 2 கி.மி., தூரத்தில் ஆர்.எம். காலனி அருகே வேதாத்திரி நகரில் அறிவுத்திருக்கோயில் எதிர்புறம் கோயில் அமைந்துள்ளது.
தொடர்புக்கு:97896-97346.