பதிவு செய்த நாள்
17
மே
2013
10:05
சிவகங்கை:நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில்,வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில், வீற்றிருக்கும் அம்மன் பிரசித்தி பெற்றது. இங்கு, கண் குறை உள்ளோர் நிவர்த்தியான பின், கண்மலர் வாங்கி நேர்த்தி செலுத்துவர். உடல், பிற குடும்ப பிரச்னை தீரவேண்டி, அம்மனை தரிசித்து செல்வர். அவர்களது குறைகள் நிவர்த்தியாகும், இதனால் இக்கோயில் மிக பிரசித்தி பெற்றது. கொடியேற்றம்: இக்கோயிலில், வைகாசி விசாக திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வெள்ளி கேடகத்தில், சர்வ அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். காலை 11.25 மணிக்கு,கோயில் கொடிமரத்தில் கொடியேற்றி வைத்தனர். சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேரோட்டம்: 9ம் நாளான, மே 24 அன்று காலை 9.35 மணிக்கு, தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளன்று பால்குடம், பூக்குழி இறங்குதல் நடக்கும். இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் வலம் வருவார். மே 26ல் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறும். கோவில் கவுரவ கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கண்காணிப்பாளர் குமரேசன், பேரூராட்சி தலைவர் முருகானந்தம், துணை தலைவர் சரஸ்வதி வள்ளியப்பன்,பேரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.