பதிவு செய்த நாள்
21
மே
2013
10:05
பேரூர்: குளத்துப்பாளையத்தில், அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.மே 19ம் தேதி காலை 5.00 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. இதன் பின் புண்ணியாக வாகனம், பூர்ணாஹுதி நடத்தப்பட்டு, மாலை 5.00 மணிக்கு விநாயகர் கோவிலிலிருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி, சம்பந்தி சீர்வரிசை எடுத்து வருதல், அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி, பிரவேச பலி நடத்தப்பட்டு, முதல்கால யாக பூஜைகள் நடந்தது. பின்னர், நவகிரக மூர்த்திகள் பிரதிஷ்டை, சுவாமி விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பிம்பசுத்தி அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, நேற்று அதிகாலை 4.00 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, மகாபூர்ணாகுதி, வேதபாராயணம், கடங்கள் புறப்படுதல் நிகழ்ச்சியும், 6.00 மணிக்கு, விநாயகர் விமான கோபுர கும்பாபிஷேகம், விநாயகர் கும்பாபிஷேகமும், ஸ்ரீமகாலட்சுமி அம்மன் விமானகோபுர கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. காலை 7.00 மணிக்கு, பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகள் தலைமையில், ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு மகாகும்பாபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை பயபக்தியுடன் தரிசித்தனர். காலை 9.00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டு, 10.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.