பதிவு செய்த நாள்
29
மே
2013
10:05
லக்னோ: வாரணாசி மடங்களில், இறுதி காலத்தை கழித்து வரும் விதவை பெண்களை, இந்து மதத் தலைவர்கள் மற்றும் சன்னியாசிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.கணவரை இழந்த பெண்களை, சில வட மாநிலங்களில் புறக்கணிக்கின்றனர். அத்தகையவர்கள், தங்களின் கடைசி காலத்தை, "காசி என்றழைக்கப்படும் வாரணாசியில் கழிக்கின்றனர். இதற்காக உள்ள மடங்களில், அந்த பெண்கள், மிகவும் வறிய நிலையிலும், மோசமான சூழ்நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர்.
"சுலப் இன்டர்நேஷனல் என்ற தொண்டு அமைப்பின் சார்பில், அந்தப் பெண்களுக்கு, மாதம்தோறும், 2,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டம், சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில், இந்து மதத் தலைவர்களும், சாதுக்களும், சன்னியாசிகளும், அந்தப் பெண்களை சந்தித்து ஆறுதல் வழங்கும் நிகழ்ச்சியை, நேற்று முன்தினம், "சுலப் நிறுவனத்தின் தலைவர், பிந்தேஷ்வர் பதக் அறிமுகப்படுத்தினார்.அதில், ஏராளமானோர் பங்கேற்று, விதவைப் பெண்களுக்கு ஆறுதல் வழங்கினர். கைவிடப்பட்ட விதவை பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் சட்ட திருத்த மசோதா கொண்டு வர, மத்திய அரசை கோர உள்ளதாக, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறினர்.