பதிவு செய்த நாள்
29
மே
2013
10:05
சென்னை: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் குளத்தில், நிரந்தரமாக தண்ணீர் தேக்கவும், படிக்கட்டுகள் மற்றும் தடுப்பு சுவர்கள் கட்டவும், 15 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் கோரப்படுகின்றன. வடசென்னை, திருவொற்றியூரில் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 1998ல், கும்பாபிஷேகம் நடந்தது. 2010ல் கும்பாபிஷேகம் நடைபெற நிதி ஒதுக்கப்படாததால், கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.
களிமண்: இதை அடுத்து, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்கு, 13வது நிதிக்குழு மூலம், 45.60 லட்ச ரூபாயும், அரசு மானியம், 21.50 லட்சமும், ஆணையர் பொதுநல நிதி, 9 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும், பிற கோவில் நிதி, 18.40 லட்சமும், மற்ற திருப்பணிகள், கோவில் மற்றும் உபயதாரர்கள் நிதி உதவி மூலம், கோவில் திருப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. திருப்பணியுடன், கோவில் குளத்தை சீரமைக்க, இந்து சமய அறநிலைய துறை, 15 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. எவ்வளவுதான் மழை, வெள்ளம் வந்தாலும் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் தேங்காததால், அதை தடுக்கும் முயற்சியாக, குளத்தில் களிமண் கொட்டி, ஜே.சி.பி., மூலம் பரப்பப்பட்டு வருகிறது.பின், தண்ணீர் தேக்கும் இடங்களை சுற்றி தடுப்பு சுவர் அமைக்கவும், சேதமடைந்த குளத்து படிக்கட்டுகளை, புதிதாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம், வரும் மழைக் காலத்திற்குள் பணி முடிந்து, குளம் தயாராகிவிடும் என, கோவில் நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆக்கிரமிப்பு
இது குறித்து, பக்தர் ஒருவர் கூறுகையில், "கோவில் குளத்தை சுற்றி, நிலத்தடி நீர்மட்டம், நூறடிக்கு கீழ் சென்று விட்டது. இதனால் தான் தண்ணீர் தேங்குவது அரிதாகிவிட்டது. மேலும், மழைநீர் சேகரிப்பு ஊற்று, முற்றி லும் தூர்ந்து போய்விட்டது. குளத்திற்கு செல்லும் வடிகால்வாய் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிரந்தர மாக தண்ணீர் தேக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றார். இந்து சமய அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "திருவொற்றியூர் கோவில் குளத்தில் கான்கிரீட்டால் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க, 7.5 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. அதேபோல, கோவில் படிக்கட்டு களை புதிதாக கட்டுவதற்கு, 7.5 லட்சம் ரூபாய்க்கான ஒப்பந்தம், வரும் 29ம் தேதி (இன்று) கோரப்படுகிறது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதும், பணி துவங்கும் என்றார்.