பதிவு செய்த நாள்
05
ஜூன்
2013
10:06
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன், காளகத்தீஸ்வரர் கோயில் கட்டுவதற்கான வாஸ்துபூஜை நேற்று நடந்தது. அபிராமியம்மன் பாலாலயம் செய்யப்பட்டுள்ள இடத்தில் இருந்து, அம்மன் அனுமதி பெற்று புனித நீர் நிறைந்த குடங்கள் பன்னீர், புஷ்பம் அபிஷேகம் செய்யப்பட்டது. இசை, மேள தாளங்கள் முழங்க கல்யாணி குருக்கள், குருநாத குருக்கள், முத்துக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களும், திருப்பணிக்குழு தலைவர் வேலுச்சாமி மற்றும் பொதுமக்களும் ஊர்வலமாக வாஸ்து பூஜை செய்யும் இடத்திற்கு வந்தனர்.
காலை 9 மணிக்கு சிவவேள்வி பூஜையும், யாகமும் நடந்தது. காலை 10 மணிக்கு திருகயிலாயமலை மானசொருபர் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, வாஸ்து பூஜையும், பாலகொம்பை நடப்பட்டு, பாலாபிஷேகம் செய்யப்பட்டது. நகராட்சி தலைவர் மருதராஜ், வர்த்தக சங்க தலைவர் எஸ்.கே.சீ., குப்புச்சாமி, வர்த்தக சங்க துணை தலைவர் ஜி.சுந்தரராஜன், வீனஸ் கதிரேசன், பி.எம்.எஸ்., முருகேசன், மாவட்ட வருவாய் அதிகாரி மனோகரன், கோயில் நிர்வாக அதிகாரி அறிவழகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.