செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளிக்காப்பு அணிவித்தனர். இரவு 11 மணிக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததால் எல்லா இடத்திலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் வழக்கமாக இரவு 12 மணிக்கு துவங்கும் ஊஞ்சல் உற்சவத்தை ஒரு மணி நேரம் முன்னதாக 11 மணிக்கு துவக்கினர். ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய அங்காளம்மனுக்கு ஒரு மணிநேரம் ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் அம்மன் பக்தி பாடல்களும்,தாலாட்டு பாடல்களும் பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். சென்னை, புதுச்சேரி, வேலூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.