பதிவு செய்த நாள்
10
ஜூன்
2013
10:06
பழநி : பழநியில் 2004ல் துவக்கப்பட்ட ரோப்காரில், இதுவரை 2 முறை விபத்து ஏற்பட்டுள்ளது. அதே சமயம், ஜப்பான் தொழில்நுட்பத்துடன் இயங்கும், முதலாவது "வின்ச், 47 ஆண்டுகளாக, எவ்வித பழுதும் ஏற்படாமல், ஓடிக் கொண்டிருக்கிறது.தரையில் இருந்து, 426 மீட்டர் உயரத்தில் உள்ள, பழநி மலைக்கோயிலுக்கு, படிப்பாதை (689படிகள்), யானைப்பாதை வழி செல்லலாம். எளிதாக, மலைக் கோயிலுக்கு செல்ல வசதியாக, "வின்ச் (மின் இழுவை ரயில்), "ரோப்கார் உள்ளன.
47 ஆண்டுகள்: முதல் "வின்ச் க்கான இயந்திர, உபகரணங்கள், ஜப்பானில் இருந்து (ஹிட்டாச்சி) வரவழைக்கப்பட்டன. மின் இணைப்பிற்கான பணிகளை, தேவஸ்தானம் மேற்கொண்டது. கடந்த 1966 ல், முதன் முதலாக, "வின்ச் (தற்போது நடுவில் உள்ளது) இயக்கப்பட்டது.இதே தொழில்நுட்பத்தில், 1982 ல், இரண்டாவது "வின்ச் (தற்போதைய முதல் எண்); 1993 ல், மூன்றாவது "வின்ச் அமைக்கப்பட்டது.மூன்று "வின்ச் களையும், தேவஸ்தானம் பராமரிக்கிறது. ரயில்வே தண்டவாள அமைப்பில், "வின்ச் உள்ளதால், ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடக்கும், பராமரிப்பு பணியின் போது, ரயில்வே அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்கின்றனர். "வின்ச் மூலம், 8 நிமிடத்தில், மலைக்கு செல்லலாம்; கீழே இறங்க, 7 நிமிடம் ஆகிறது; ஒரு தடவைக்கு, 36 பக்தர்கள், மலைக்கோயிலுக்கு பயணம் செய்யலாம்.
வருமானம்: கடந்த 2011-12 ல், "வின்ச் மூலம் அதிகபட்சமாக, 3 கோடி 38 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய், வருமானமாக கிடைத்தது. தமிழகத்தில், "வின்ச் மூலம், கோயில் செல்லும் வாய்ப்பு, பழநியில் மட்டுமே உள்ளது.
தொழில்நுட்பம்: ஜப்பான் தொழில்நுட்பத்தில், இயங்கும், முதல் "வின்ச்ல், இதுவரை பழுது ஏற்படவில்லை.மூன்று "வின்ச் களும், கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த, மின்பொறியாளர்களால் கண்காணிக்கப்படுகிறது. கடந்த 2003ல், மூன்றாவது "வின்ச்ல், விபத்து ஏற்பட்டு, ஒருவர் இறந்தார். இதுதவிர, மூன்றாவது "வின்ச், அவ்வப்போது சிறு பழுது ஏற்படுகிறது. கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் "வின்ச் களில், ஏற்படும் பிரச்னைகள், உடனுக்குடன் தீர்வு காணப்படுகின்றன. அதே சமயம், கோல்கட்டாவை சேர்ந்த, தனியார் நிறுவனம் மூலம் பராமரிக்க படும் "ரோப்காரில் பழுது உடனடியாக சீரமைக்கப்படுவது இல்லை. தேவஸ்தானமும், அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை; மீண்டும், இயக்க காலதாமதமாகிறது. "எங்களால், தனியார் நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நிர்வாக ரீதியாக சிக்கல் உள்ளது என, தேவஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர்.வெளிநாட்டு பராமரிப்புஇந்தியாவில், ஹரித்துவார் அஞ்சனி தேவி கோயில் மற்றும் கேரளா, ஆந்திர மாநிலங்களில் உள்ள "ரோப் கார் களை, பராமரிக்கும் பொறுப்பை, வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்றுள்ளன. இதனால், அவை சிறப்பாக இயங்குகின்றன. அதேபோல், பழநி "ரோப்கார் பராமரிப்பை, வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம்; அந்நிறுவனம் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட வேண்டும். அப்போதுதான், "ரோப்கார் விபத்தின்றி இயங்கும்.
ஜப்பானுக்கு சல்யூட்: ஓய்வுபெற்ற, மலைக்கோயில் பொறியாளர் சங்கர நாயர் கூறியதாவது: மூன்று "வின்ச்கள், துவக்கத்தின் போது, மலைக்கோயில் பொறியாளராக இருந்தேன். முதல் "வின்ச், ஜப்பான் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டது. அதே போல, ஜப்பான் தொழில்நுட்பத்தில், இரு "வின்ச் கள் அமைக்கப்பட்டன. முதலாவது "வின்ச், எவ்வித பழுதும் ஏற்படாமல், சிறப்பாக செயல்படுகிறது. சபரிமலை, திருப்பதி போன்ற கோயில்களிலும், "வின்ச் அமைக்க முயற்சி எடுத்தனர். ஆனால், பழநியில் மட்டுமே, சாத்தியமானது. "ரோப்கார் பராமரிப்பை, தனியார் நிறுவனம் மேற்கொள்வதே, பழுதிற்கு காரணம். கோயில் நிர்வாகத்தினர் கட்டுப்பாட்டில் இருந்தால், பணியாளர்களை வேலை வாங்க முடியும். தனியார் என்பதால், சிறப்பான பணியை எதிர்பார்க்க முடியவில்லை, என்றார்.
இரண்டாவது ரோப்கார்: கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், "வின்ச் இயக்கம் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள், கோயில் நிர்வாகத்தின் கீழ் தான் உள்ளனர். நாள்தோறும் "ஆயில், "கிரீஸ் மாற்றப்படுகிறது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை, முழுமையாக கழற்றி, தேய்மானம் கணக்கிட பட்டு, பழுது இருந்தால் சரிசெய்யப்படுகிறது. "ரோப் கார், தனியார் நிறுவன பணியாளர் மூலம் பராமரிக்கப்படுகிறது. அவர்களுக்கு, 2014 வரை, ஒப்பந்தம் உள்ளது. இரண்டாவது "ரோப்கார் அமைக்க, உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றார்.
அரிதிலும் அரிதான விபத்து: ஆறு ஆண்டுகளுக்கு முன், "ரோப்கார் விபத்தில் 4 பேர் இறந்தனர். விபத்திற்கான காரணம் குறித்து அறிய, மின்வாரிய தலைமை பொறியாளர் (ஓய்வு) மீனாட்சிசுந்தரம் தலைமையில், வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அறிக்கையின், சாரம்சம்:விபத்தின் போது, 14 பெட்டிகள் இயக்கப்பட்டன. "ரோப் கார் ஸ்டேஷனில் இருந்து, 7 பெட்டிகள், மலை கோயிலுக்கு, கீழிருந்து மேலாகவும்; 7 பெட்டிகள், மேலிருந்து கீழாகவும் இயக்கப்பட்டன. மேல்நோக்கி சென்ற பெட்டி (எண் 3) ஒன்று, மேல்நிலை கோபுரத்தில் இருந்த, நீளமான காப்பு தகடு மீது மோதி, பின்னோக்கி வந்தது. பின்னால் வந்து கொண்டிருந்த, மற்றொரு பெட்டி(எண் 9) மீது மோதியது. பெட்டியின் கதவு திறக்கப்பட்டு, 3 பேர் கீழே விழுந்தனர். பெட்டி எண் 3, "ரோப் கிரிப் விலகி கீழே விழுந்தது.பெட்டியின் வடிவமைப்பு, பராமரிப்பு குறைபாடுகள், அதிகமான காற்றுவேகம், பயணிகளால் பெட்டியின் உள்ளே ஏற்படும் அசாதாரணஅசைவுகள் ஆகிய நான்கு கோணங்களில், விபத்திற்கான காரணம் ஆராயப்பட்டது. வடிவமைப்பு, பராமரிப்பு, அதிகமான காற்றுவேகம் காரணமாக, விபத்து நடக்கவில்லை. "ரோப்கார் பெட்டியில், பயணம் செய்த நபர்கள், எழுந்து இடம்மாறி உட்கார்ந்த போது, பக்கவாட்டு அசைவு அதிகமாகி, விபத்து நடந்து உள்ளது. "ரோப்கார் ஆரம்பித்து, 34 மாதங்கள் ஆன நிலையில், 15 லட்சம் முறைகள், மேல்கோபுரத்தின் வழி, பெட்டிகள் பயணம் செய்த போதிலும் கூட, அசைவுகள் ஏற்படாத காரணத்தினால், விபத்து நடக்கவில்லை. எனவே இந்த நிகழ்வு "அரிதிலும் அரிதான விபத்து. இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு, பயணிகள் பயணம் செய்யும்போது, "ரோப் கார் பணியாளர்கள் கூறும், விதிமுறைகளைக் கடைபிடித்தாலே போதும். வருங்காலங்களில், விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை, அதிகரிக்க செய்வது ஒன்றே, தீர்வாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
எது சிறந்தது: "ரோப் காரில், 3 நிமிடத்தில் (305 மீட்டர் தூரம்), மலைக்கோயிலுக்கு செல்லலாம். இதில் "அயன் ரோப் (இரும்பு வடக்கயிறு), அடிக்கடி பழுதாகிறது. "இதை முறையாக பராமரிக்கிறோம் என கூறுகின்றனர். ஆனால் "ரோப்காரில் பழுது ஏற்பட்டு, விபத்தும் நடக்கிறது. கடந்த 2007 ஆக., 26ல், "ரோப் கார் பெட்டி அறுந்து விழுந்து, 4 பேர் இறந்தனர். ஜூன் 5ல், பல் சக்கரத்தில் (கியர்) பழுது ஏற்பட்டு, 250 அடி உயரத்தில், 8 பெட்டிகளும் அந்தரத்தில் தொங்கின. பெட்டிகளில் இருந்த, 24 பக்தர்களும், "டோலி கட்டி மீட்கப்பட்டனர்.