பதிவு செய்த நாள்
13
ஜூன்
2013
10:06
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சுவாமி சன்னதி கம்பத்தடி மண்டபத்தில், 150 ஆண்டுகள் பழமையான கொடிமரத்திற்கு பதில், புதிய மரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயிலில் எந்த திருவிழா என்றாலும், அதன் அறிகுறியாக கொடியேற்றுவது வழக்கம். இதற்கான கொடிமரத்தின் உள்பகுதி பழுது அடைந்ததால், புதிய மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், நெல்லை மாவட்டம் செங்கோட்டை வனப்பகுதியில் இருந்து, தேக்கு மரம் விலைக்கு வாங்கப்பட்டது. ஆகமவிதிப்படி செய்யப்பட்ட புதிய மரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், தக்கார் கருமுத்து கண்ணன், கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் பங்கேற்றனர். கொடிமரத்திற்கு கீழ் நவரத்ன கற்கள் மற்றும் பழைய மரத்தில் இருந்த 1841ம் ஆண்டின் அரையணா, இரண்டணா காசுகள் பதிக்கப்பட்டன. கருமுத்து கண்ணன் கூறியதாவது: இக்கொடிமரம் 58 அடி உயரம், சுற்றளவு 7 அடி கொண்டது. பணிகள் முழுமையாக முடிந்த பின், 13 கிலோ மதிப்பிலான தங்கமுலாம் பூசப்பட்டு, ஜூலை 10ல், கும்பாபிஷேகம் நடைபெறும். மொத்த செலவு மதிப்பீடு ரூ.4 கோடி, என்றார்.