பதிவு செய்த நாள்
26
ஜூன்
2013
10:06
திருச்சி: மத்திய அரசின் நிதியுதவியினால், திருச்சி திருவானைக்கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள அற்புதமான சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு, பக்தர்களின் பார்வைக்கு விடப்படவுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில். ஆண்டுதோறும் இங்கு நடக்கும் ஆடிவெள்ளி மற்றும் சிவராத்திரி, பங்குனி தேரோட்டம் விழாக்கள் உலக பிரசித்திப்பெற்றது. செங்கண்ணனன் என்கிற செங்கோட்சோழன், ஆயிரம் ஆண்டுக்கு முன் கட்டிய இத்திருத்தலத்தில், ஏழு கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் உள்ளன. சோழர் காலத்து கட்டிட கலையின் சிறப்பை காட்டும் வகையில், அதி அற்புதமான சிற்பங்கள், ஓவியங்கள் கோவிலில் திரும்பிய திசையெல்லாம் உள்ளன. குறிப்பாக, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு தூண்களும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட ஏராளமான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இவை, கோவை மாவட்டம் பேரூர் கோவிலில் உள்ள சிற்பங்களுக்கு இணையானவை. ஆனால், இதன் பெருமை வெளியே தெரியாத வகையில், "சிவில் சப்ளைஸ் குடோனாக பயன்படுத்தப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி மாறிய பிறகு, அங்கிருந்து குடோன் காலி செய்யப்பட்டது. தற்போது இங்கு, காசிசெட்டி மாநகராட்சி பெண்கள் நடுநிலைப்பள்ளி தற்காலிகமாக செயல்படுகிறது. திருவானைக்கோவில் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தின் பெருமையை நன்குணர்ந்த, மத்திய சுற்றுலா வளர்ச்சித்துறை, கோவிலை சீரமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன், 97 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. அதைக்கொண்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள தூண்கள், பக்கவாட்டு சுவர்கள் மற்றும் இணைப்புகளில் உள்ள விரிசல்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. தூண்களில் உள்ள பிரம்மாண்ட சிலைகளில் உள்ள அழுக்குகளை நீக்க, தண்ணீர் வேகமாக பீய்ச்சி (ஸ்பிரே) அடிக்கப்படுகிறது.
இதன்பிறகு, தூண்கள், சிலைகளை பாதுகாக்கும் வகையில், "ஸ்டோன் வார்னிஷ் அடிக்கப்பட உள்ளது. கோவில்களில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள அழகிய ஸ்வாமி படங்கள், ஓவியங்கள் சேகரிக்கப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட உள்ளன. ஆயிரங்கால் மண்டபத்தில் "லைட் அமைக்கப்பட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொருட்காட்சி அரங்கம் போல அமைத்து, பழங்கால சிற்பம், சிலைகள், ஓவியங்கள் ஒரே இடத்தில் கண்டுகளிக்க, இரண்டு ரூபாய் கட்டணத்தில், பக்தர்களை அனுமதிக்கும் திட்டமும் இருக்கிறது. பிரசித்திப் பெற்ற ஆடிப்பூர தீர்த்த தெப்பக்குளம் தூர்வாரப்பட விருக்கிறது. குளத்தை சுற்றியுள்ள தூண்கள், மைய மண்டபம், ஓர மண்டபத்தில், "ஸ்டோன் வார்னிஷ் அடிக்கப்படும். மத்திய அரசின் நிதியின்கீழ், ஆயிரங்கால் மண்டபம், ஆடிப்பூர தெப்பக்குளம் மட்டுமல்லாது மேலும், மூன்று பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.