திருப்பூர்: ராமன் மீது அதிக பற்று கொண்ட ஆஞ்சநேயரின் ராமபக்தி போற்றத்தக்கது என சொற்பொழிவாளர் வாசுதேவன் பேசினார்.திருப்பூர் பி.என்., ரோட்டில் உள்ள ஸ்ரீ சத்ய சாயிபாபா கோவிலில் "சத்யசாய் சப்தாஹ தேவாமிர்த சொற்பொழிவு நடந்து வருகிறது. அதில், சொற்பொழிவாளர் வாசுதேவன் பேசியதாவது: ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்திக்கொண்டு போய், இலங்கை அசோகவனத்தில் வைத்திருந்தான். ராவணனின் சபையில் இருந்த வீரர் ஒருவர், "சீதையை நீ தாசியாக பார்க்காதே, அவள் உத்தமி; ஒரே அம்பில் 16 ஆயிரம் ராட்சதர்களை கொன் றவன் ராமன். நீ பிழைக்க முடியாது. சீதையை உடனே விட்டு விடு, என்றான். போர் நடக்கிறது; ராவணன் கொல்லப்படுகிறான்.சித்திரக்கூட மலையில் ராவணன் சீதையை கடத்தி செல்லும் போது, தன்னை கடத்தி செல்வது தெரிய வேண்டும் என்பதற்காக சீதை, ஒவ்வொரு பொருளாக வீசி செல்கிறார். அதனை ராமன் கையில் எடுத்து சீதையின் பொருளா என, பார்க்கிறான்; லட்சுமணனிடம் காட்டி கேட்கிறான். அதற்கு லட்சுமணன், "காலையில் எழுந்ததும் தாயாக நினைத்து, சீதையை வணங்கும்போது அவருடைய கால் சலங்கையை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். இப்பொருள் அவருடையதா, என எனக்கு தெரியவில்லை, என்றான். சீதையின் மீது லட்சுமணன் கொண்ட பக்தியை இச்சம்பவம் காட்டுகிறது."நான் பிறந்ததே ராமனுக்கு பணி செய்ய, என ஆஞ்சநேயர், ராமனுக்கு பணிகளை செய்தார். ஆஞ்நேயரின் பணியை பார்த்து, ராமன் பரிசு கொடுக்க விரும்பினார். சீதை கழுத்தில் அணிந்திருந்த மாலையை எடுத்து கொடுத்தார். அதனை தனது காதில் வைத்து கேட்ட ஆஞ்சநேயர் அதை தூக்கி எறிந்தார். ராமன் காரணம் கேட்டபோது, "அந்த மாலை ராம நாமம் கூறவில்லை; அதைக் கூறாத எந்த பொருளும் எனக்கு தேவையில்லை. ஆஞ்சநேயரின் ராமபக்தி போற்றத்தக்கது. இவ்வாறு வாசுதேவன் பேசினார்.