பதிவு செய்த நாள்
27
ஜூன்
2013
10:06
அவிநாசி: திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவிலில், கொடிக்கம்பத்தின் கீழ் வீற்றிருக்கும் நந்தியம் பெருமானுக்கு தொட்டி கட்டப்பட்டு, அதில்,தண்ணீர் நிரப்பி பூஜை நடந்து வருகிறது. நேற்று, வருண யாகம் நடத்தப்பட்டு, திருமுருகநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமுறை (மழை வேண்டுதல் பதிகம்) பாராயணம் செய்யப்பட்டது. செயல் அலுவலர் சரவணபவன், தக்கார் வெற்றிச்செல்வன், கோவில் சிவாச்சார்யார்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். ஆலத்தூர் ஊராட்சியில் உள்ள மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில், மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன. பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டன. அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி ஆகிய ராகங்களை நாதஸ்வர வித்வான்கள் வாசித்தனர். கோவில் செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.