பதிவு செய்த நாள்
28
ஜூன்
2013
10:06
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அறங்காவலராக, டி.வி.எஸ்., நிறுவனங்களின் சேர்மன் வேணு சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக, அசோக் லேலண்ட் நிறுவன துணை சேர்மன் சேஷசாயி, டாக்டர் சீனிவாசன், ரங்காச்சாரி, கஸ்தூரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். உறுப்பினர்கள் ஒரு மனதாக சேஷசாயியை அறங்காவலர் குழுத்தலைவராக தேர்ந்தெடுத்தனர். அமெரிக்காவில் வசிக்கும் சேஷசாயி, அடிக்கடி ஸ்ரீரங்கத்துக்கு வரமுடியவில்லை என்று காரணம் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். உண்மையில், முதல்வர் ஜெயலலிதா வருகையின்போது, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அவர் வராததும், சேஷசாயி நிறைவேற்றிய, 200க்கும் மேற்பட்ட தீர்மானங்களை கோவில் நிர்வாகம் கண்டுக்கொள்ளாததுமே ராஜினாமாவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் மற்றொரு தொழிலதிபர், டி.வி.எஸ்., நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக தமிழக அரசு நியமித்தது. நேற்று ஸ்ரீரங்கம் வந்த அவர், மூலவர், தாயார் சன்னதிக்குச் சென்று தரிசனம் செய்தார். அறங்காவலர் குழு கூட்ட அரங்கில் புதிய உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து, அறங்காவலர் குழுத்தலைவர் தேர்தலை திருச்சி மண்டல கோவில்களின் இணை கமிஷனர் புகழேந்திரன் நடத்தினர். உறுப்பினர்கள் ஒருமனதாக, வேணு சீனிவாசனை அறங்காவலர் குழுத்தலைவராக தேர்ந்தெடுத்தனர். வேணு சீனிவாசனுக்கு, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் தனபால், ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் கல்யாணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வேணு சீனிவாசனை அறங்காவலர் குழுத்தலைவராக நியமித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது. ஸ்ரீரங்கம் கோவில் தெப்பக்குளம் உள்ளிட்ட, 6 தெப்பக்குளங்களை, 54 லட்ச ரூபாயில் சீரமைப்பது. ஒரு கோடி ரூபாய் செலவில் அன்னதான கூடமும், 60 லட்ச ரூபாய் செலவில் காத்திருப்போர் கூடமும் கட்டுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அறங்காவலர் குழுத்தலைவர் வேணு சீனிவாசன், ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் கட்டப்பட்டு வரும் யாத்ரீகா நிவாஸ் கட்டிடத்தை பார்வையிட்டார். ""அறங்காவலர் குழுவை பொறுத்தவரை முதல்வர் ஜெயலலிதாவின் தேர்வு சரியானதாக இருந்தாலும், தொடர்ந்து, வெளிநாடுகளில் வசிப்பவர்களை அறங்காவலர் குழுத்தலைவராக நியமிப்பது கோவிலில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்களை பாதிக்கும், என்று பக்தர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.