பதிவு செய்த நாள்
01
ஜூலை
2013
10:07
குளித்தலை: கடம்பனேசுவரர் கோவிலுக்கு, 21 லட்சம் ரூபாய் செலவில், 37.5 அடி உயரத்தில் பிரமாண்ட புதிய தேர் அமைக்கும் பணியில் சிற்பிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள கடம்பனேசுவரர் கோவிலானது, ஆயிரத்து, 500 ஆண்டுகள் பழமையான சிவதலமாகும். இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்திருப்பது இதன் அரியதொரு தனிச்சிறப்பாகும். ஆண்டு தோறும் தைப்பூசம் அன்று இத்தலமானது விழாக்கோலம் பூண்டிருக்கும். தினமும், குளித்தலை, தோகமலை, மாயனூர் உள்பட பல பகுதியில் இருந்து, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு நடத்துகின்றனர்.கடம்பர் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வெகுவிமர்சையாக நடக்கும். ஆனால் இத்தேர் பழுதடைந்ததால், புதிய தேர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. புதிய தேர் அமைக்க இந்துசமய அறநிலைத்துறை சார்பில், 21 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, புதிய தேர் அமைக்கும் பணியை, பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரைச் சேர்ந்த, 15 சிற்பிகள் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த, ஐந்து மாதமாக கடம்பனேசுவரருக்கு புதி தேர் பணி அமைக்கும் பணி வருகிறது. இதுகுறித்து சிற்பி சுப்பிரமணியின் கூறியதாவது:புதிய தேர், 37.5 அடி உயரத்தில் உருவாக்கப்படுகிறது. இதில், 15 அடி உயரத்தில் ஸ்வாமி சிம்மாசனம் ஏற்படுத்தப்பட்டு, அதற்கு மேல், 22.5 அடி உயரத்தில் கோபுர கலசம் அமைக்கப்படுகிறது. மேலும், 15க்கு 15 அகலமும், ஆறு அடி உயரம் கொண்ட இரும்பு சக்கரங்கள் செய்யப்படும். தேரைச்சுற்றி நான்குபுறமும் கலை வேலைப்பாடுகள் கூடிய ஸ்வாமி உருவங்கள், பலவகையான புராண விளக்கும் படங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.தேர் அமைக்கும் பணி விரைவில் முடிக்க, சிற்பிகள் அனைவரும் தீவிரம் காட்டி வருகின்றனர். தினமும் ஸ்வாமியை தரிசிக்க கோவிலுக்கு வரும் பக்தர்கள், புதிய தேர் அமைக்கும் பணியை வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.