பதிவு செய்த நாள்
03
ஜூலை
2013
10:07
நாகப்பட்டினம்: நாகை அருகே, சூரனூர் கிராமத்தில் காணாமல் போன, பழமையான சிவன் கோவிலை மீண்டும் கட்டித்தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்திஉள்ளனர். நாகை, வைப்பூர் அடுத்த, சூரனூரில், 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, கருங்கல்லால் கட்டப்பட்ட, தர்மாம்பாள் சமேத தர்மபுரீஸ்வரர் கோவில் இருந்தது. இக்கோவிலில் விநாயகர், சனீஸ்வர பகவான், பைரவர், முருகன், சண்டிகேஸ்வரர், பலிபீடம் நந்தி மற்றும் பரிவார தேவதைகள் என, தனித்தனி சன்னிதி கொண்டு அருள்பாலித்து வந்தனர். கிராம மக்கள் சார்பில், 50 ஆண்டுகளுக்கு முன், கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக, சுவாமி சிலைகளை பாலாலயம் செய்து, கோவிலையொட்டிய பகுதியில், கீற்றுக் கொட்டகையில், சுவாமிகளை வைத்து, பூஜைகள் நடந்துள்ளது. இக்கிராமத்தில் வறட்சியால் பஞ்சம் ஏற்பட்டு, கும்பாபிஷேக பணிகளை மேற்கொண்ட கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள், பிழைப்பு தேடியும், வேலை நிமித்தமாகவும் பல்வேறு பகுதிகளில் குடி பெயர்ந்தனர். இதையடுத்து, கும்பாபிஷேக பணிகள் தொய்வடைந்து, காலப்போக்கில் சுவாமிகளுக்கு நடந்து வந்த பூஜைகளும் நின்று போயின.
பழமையான கோவிலும் பராமரிப்பின்றி சிதிலமடைந்து, கேட்பாரின்றி கிடந்ததால், வேறு பகுதிகளில் இருந்து, இப்பகுதியில் குடியேறிவர்களுக்கு இக்கோவிலின் அருமை தெரியாமல், கோவிலில் இருந்த கருங்கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, களத்து மேட்டில் நெல் கதிர்களை அடிக்கவும், கிராம மக்களின் பல்வேறு பணிகளுக்கும் பயன்பட்டுள்ளன. பராமரிக்கப்பட்டு வந்த சுவாமி சிலைகளும் மர்ம நபர்களால் கொள்ளை போயுள்ளது. தற்போது, கோவில் இருந்த இடம் முட்புதர்கள் மண்டி, குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. மூலவர் சன்னிதியில் இருந்த சிவலிங்கம் வைக்கோல் போரால் மூடப்பட்டுள்ளது. சிவலிங்கத்திற்கு எதிரில் நந்தி சிலையும், பரிவார தேவதைகள் சிலைகளும் கிடக்கின்றன. சண்டிகேஸ்வரர் சிலை சிதைக்கப்பட்டு கிடக்கிறது.
இதுகுறித்து, இக்கிராமத்தை சேர்ந்த, வெங்கட்ராமன் என்பவர் கூறியதாவது: ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நாங்கள் சிறியவர்களாக இருந்தப் போது, இப்பகுதியைச் சேர்ந்தவர்களும், சுற்று வட்டார மக்களும், இக்கோவிலில் வழிபட்டோம்; நாள்தோறும் ஆறு கால பூஜைகள் நடக்கும். இக்கிராம மக்கள் நகரப் பகுதிகளுக்கு, இடம் பெயர்ந்ததால், கோவில் மராமத்து பணி நடக்காததால், பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவில் இருந்த இடம், மண்மேடாக காட்சி அளிப்பது கிராமத்து மக்களை வேதனையடைய வைத்துள்ளது. இக்கோவிலின் வரலாறு தெரிந்தோர், இப்போது உயிருடன் இல்லை. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். அரசு தலையிட்டு, கோவில் இருந்த இடத்தில், மீண்டும் கோவில் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.