பதிவு செய்த நாள்
05
ஜூலை
2013
11:07
சென்னை: சென்னை, நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கை, அரசு திரும்பப் பெறுவது செல்லும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை, நங்கநல்லூரில், பிரசித்திப் பெற்ற, ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை நிர்வகிக்கும், "மாருதி பக்த சமாஜம் அறக்கட்டளை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு: அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்ட மனுவைத் தொடர்ந்து, கோவில் நடவடிக்கைகளில் அரசு குறுக்கிடுவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் கீழ், சில பிரிவுகளில் இருந்தும், விலக்கு அளிக்கப்பட்டது. அறநிலையத் துறை, எங்களுக்கு அளிக்கப்பட்ட விலக்குகளை வாபஸ் பெற்றது. இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். அதற்கு, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, நீதிபதி சசிதரன் விசாரித்தார். அரசு தரப்பில், அட்வகேட் - ஜெனரல் சோமயாஜி, சிறப்பு அரசு பிளீடர் கந்தசாமி ஆஜராகினர்.
நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: அறநிலையத் துறை சட்டத்தின் கீழ், விலக்கு அளித்த உத்தரவில், "கோவிலுக்கு தான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு அல்ல என்று கூறப்பட்டுள்ளது. பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகை, கோவில் கணக்கில் பராமரிக்கப்படவில்லை. பெறப்பட்ட நன்கொடை, அர்ச்சனைகளில் இருந்து பெற்ற தொகை, அறக்கட்டளைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. எனவே, அரசு பிறப்பித்த உத்தரவில் நியாயம் உள்ளது. விதிவிலக்கை வாபஸ் பெற, அரசு தெளிவான காரணங்களை கூறியுள்ளது. அந்த உத்தரவை, சட்டவிரோதமானது என, கூற முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.