பதிவு செய்த நாள்
07
மார்
2011
03:03
தம்பி! நீ போய்விட்ட பிறகு நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்? ஆனால், உன்னைக் கொன்றவர்களை பழிவாங்காமல், நான் மடிந்தால், உன் ஆத்மா சாந்தி பெறாது. இப்போதே புறப்படுகிறேன்! உன் சிரமறுத்தவனின் சிரத்தை பதிலுக்கு அறுத்து, உனக்கு படையலிட்ட பிறகே உன்னை வந்தடைவேன், என முழங்கினான். தம்பியைக் கொன்ற மகோற்கடரை பழிக்கு பழி வாங்க பெரும்படையுடன் புறப்பட்டான். இதையெல்லாம் மகோற்கடர் அறிந்தே இருந்தார். நராந்தகனை விட பத்தாயிரம் மடங்கு பலம் வாய்ந்த தேவாந்தகனை எப்படி அழிக்கப் போகிறோம் என காசிராஜன் கவலையில் மூழ்கியிருந்தான். அவனைத் தேற்றிய அவனது மனைவி, மகோற்கடர் வந்த பிறகு, நமக்கு தோல்வி என்பதே ஏற்படவில்லை. நீங்கள் அவரையே சரணடையுங்கள், என்றாள். அதன்படி, காசிராஜனும் மகோற்கடரை வணங்கி நிற்க, சித்தி, புத்தியர் அவனை ஆசிர்வதித்து, இம்முறை எங்கள் கணவருடன் நாங்களும் போருக்குச் செல்கிறோம். பெண்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை, என்றனர். மகோற்கடர் தனக்கு வாய்த்த வீர மனைவியர் கண்டு ஆனந்தம் கொண்டார். இருப்பினும், போர்க்களத்திற்கு வரத்தேவையில்லையே என்றார். சித்தி, புத்தியரோ அவரது பாதத்தில் விழுந்து, கணவருக்கு ஒரு துன்பம் வந்தால், மனைவி அதைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்லதல்ல! இவ்வளவு நாளும் தாங்கள் போரிட்டவர்கள் எல்லாம் வலிமையற்ற கோழைகள். இப்போது வரும் தேவாந்தகனும் அப்படிப்பட்டவனே! இருப்பினும், அவனது தந்தை ரவுத்திரகேது மாயாஜாலம் தெரிந்தவன். மாயத்தை மாயத்தாலேயே வெல்ல முடியும், என்றனர். மகோற்கடரும் அவர்களைப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்ல சம்மதித்தார். சித்திதேவி தனக்கு அடங்கிய அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய அஷ்டமாசித்தியரை வரவழைத்தாள். தேவியரே! தாங்கள் எட்டுவித சக்திகளாக இருந்து மாயங்கள் புரிந்து தேவாந்தகனை வெற்றி கொள்ள வேண்டும், என்றாள். அந்த சக்திகள் ஆயுதம் தாங்கி போர்க்களத்தில் அணிவகுத்ததுடன், தங்களுக்கு கீழ் ஏராளமான வீரர், வீராங்கனைகளையும் உருவாக்கினர். சித்த, புத்தி புடைசூழ சிங்க வாகனத்தில் மகோற்கடரும் போர்க்களத்தில் புகுந்தார்.
தேவாந்தகனும் தனது அசுரப்படையுடன் வந்து சேர்ந்தான். பெரும் சண்டை நடந்தது. எட்டுவகை சக்திகளின் மத்தியிலும் புகுந்து போரிட்டது அசுரப்படை. தேவாந்தகனின் உக்கிரம் வாய்ந்த அம்புகளின் வலிமை தாங்காமல், மகோற்கடரின் படை சற்று பின்வாங்கத்தான் செய்தது, இந்நேரத்தில் புத்திதேவி தன் புத்தியைப் பயன்படுத்தினாள். தனது உடலில் இருந்து பவுத்தேவி என்ற பூதப்பெண்ணை உருவாக்கி, தேவாந்தகனின் படையினரை விழுங்கி விடுமாறு உத்தரவிட்டாள். பவுத்தேவி ஆக்ரோஷமாகச் சென்று, அசுரப்படையினரைப் பிடித்து குவியல் குவியலாக வாயில் போட்டு விழுங்கினாள். அவளது கையில் தேவாந்தகனும் சிக்கினான். அவனையும் பிடித்து வாயில் போட்டு விழுங்கிவிட்டாள் பவுத்தேவி. அவ்வளவு தான்! எஞ்சியிருந்தவர்கள் தப்பியோடினர். என்ன ஆச்சரியம்! தன் மாயாஜால வல்லமையால், தேவாந்தகன் அவளது காது வழியாக வெளியில் பாய்ந்து தப்பி ஓடினான். நேராக, தன் தந்தை ரவுத்திரகேதுவை சரணடைந்தான். பதறி ஓடி வந்த தந்தையிடம், தம்பி இறந்து போனதையும், அவனைக் கொன்ற மகோற்கடரை அழிக்கச் சென்று தோற்று திரும்பியதையும் சொல்லி புலம்பினான். ரவுத்திரகேது இளையமகனின் மறைவுக்காக வருந்தினார். தேவாந்தகனிடம், சரி..சரி.. நடந்ததை நினைத்து வருந்துவதில் பலனில்லை. நீ வெற்றி பெற தகுந்த உபாயத்தை நான் சொல்கிறேன். இன்றிரவு அறுகோண வடிவ குண்டம் அமைத்து யாகம் செய். நான் சொல்லும் மந்திரங்களைச் சொல். யாக குண்டத்தில் இருந்து ஒரு கருப்பு குதிரை வெளியே வரும். அதில், அமர்ந்து போரிட்டால் உன்னை வெல்ல யாராலும் முடியாது, என்றார். தந்தையின் ஆலோசனைப்படி, இரவோடு இரவாக யாகம் செய்தான் தேவாந்தகன். அதிகாலை வேளையில் அந்த குதிரை வெளிப்பட்டது. அதில் ஏறியமர்ந்த தேவாந்தகன், மிகுந்த தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் போர்க்களத்தில் புகுந்தான்.
சித்தி, புத்தியரும் தங்கள் சக்தி படையையும், பவுத்தேவி தலைமையில் மற்றொரு படையையும் நிறுத்தியிருந்தனர். அந்தப் படையை அழிக்க, தேவாந்தகன் ஒரு உபாயம் செய்தான். தன் மானசீக சக்தியால், யாரும் அறியாமல் போர்க்களத்தின் ஒரு ஓரத்தில் யாக குண்டம் ஒன்றை வரவழைத்தான். மனதுக்குள் சில மந்திரங்களை ஓதினான். யாக குண்டத்தில் தானாகவே தீப்பற்றியது. அந்த வேள்வித்தீயில் இருந்து ஒரு பெண் பூதம் புறப்பட்டு வந்து, தேவாந்தகன் முன்னால் நின்றது.எஜமானரே! ஏன் அழைத்தீர்! எனக்கு பசி வாட்டுகிறது. உடனே உணவிடும், என்றது. தேவாந்தகன் சிரித்தபடியே, பூதமே! இதோ என் எதிரே நிற்கும் மகோற்கடரின் படையிலுள்ள சக்திகளையும், அவர்களோடு நிற்கும் பெண் பூதப் படையிலுள்ள ஒருவர் விடாமல் சாப்பிட்டு உன் பசியைப் போக்கிக் கொள், என்றான். அந்த பூதம் மிகுந்த மகிழ்ச்சியுடன் களத்தில் இறங்கியது. ஆனால், புத்திதேவி உருவாக்கிய பவுத்தேவி, அந்த பெண் பூதத்தை மடக்கி விட்டாள். அதனுடன் உக்கிரமாக சண்டையிட்டு, அந்த பூதத்தை கொன்று வீசினாள். பெரும் ஆத்திரமடைந்த தேவாந்தகன், மகோற்கடரின் படையைக் கட்டிப் போடும் மோகனாஸ்திரத்தை எய்தான். அது அவனுக்கு பலன் தந்தது. மகோற்கடரின் படைகள் அந்த அஸ்திரத்துக்கு மயங்கி சாய்ந்தன. காசிராஜன் கலங்கி விட்டான். மகோற்கடரே! படைகள் எல்லாம் மயங்கி விட்டன. காசிநகரம் என்னாகுமோ? எனக் கதறினான்.