பதிவு செய்த நாள்
07
மார்
2011
03:03
வித்ருமையின் கணவர், சுக்கிலர் உஞ்சவிருத்திக்காக வெளியே சென்றிருந்தார். அக்காலத்தில் வேதியர்கள், உஞ்சவிருத்தி எனப்படும் பிøக்ஷ எடுத்து வரும் அரிசியை சமைத்து ஆண்டவனுக்கு நைவேத்யம் செய்வார்கள். அதையே சாப்பிடுவார்கள். மீதியிருந்தால் தானம் செய்து விடுவார்கள். சில சமயங்களில் ஏதும் கிடைக்காமல் போனால் பட்டினி தான். இந்நிலையில், மகோற்கடருக்கு விருந்து வைக்க வேண்டும் என்றால் நடக்கிற செயலா? ஆதிசங்கரருக்கு ஒரு நெல்லிக்கனி போல, வித்ருமையின் வீட்டிலும் தவிடும், வெல்லமும் இருந்தது. அந்த தவிட்டில் மோதகம், அதிரசம் முதலானவை செய்தாள் வித்ருமை. அன்புத்துணைவரே! மகோற்கடர் கருணை மிக்கவர். நம் காசி தேசத்துக்கு ஒளிகாட்ட வந்துள்ள அவர், நம்மைப் போன்ற ஏழைகளைப் புறக்கணிக்க மாட்டார். மேலும், நான் செய்துள்ள இந்த மோதகத்தில் ஒரு சிறு துளி அவர் வாயில் பட்டால் போதும், நான் மகிழ்வேன், என்றாள். சுக்கிலரும் அதை ஆமோதிப்பது போல் தலையாட்டினார். அன்றைய தினம் வழக்கத்தை விட முன்னதாகவே, மகோற்கடர் சுக்கிலரின் வீட்டுக்கு எழுந்தருளினார். உலகைக் காக்க வந்துள்ள உத்தமரே, வரவேண்டும், வரவேண்டும், என முகமன் கூறி வரவேற்றனர் தம்பதியர். அவரது திருவடியை தாம்பாளத்தில் தாங்கி நீராட்டி, மஞ்சள், குங்குமம் முதலானவை பூசி, பாத தீர்த்தத்தை தலையில் தெளித்து, லோக நாயகரே! நாங்கள் ஏழைகள். ஏதோ எங்களால் இயன்ற பலகாரங்களைத் தவிடு கொண்டு செய்திருக்கிறோம். தாங்கள் அமுது செய்ய வேண்டும், என்று பணிவுடன் வேண்டினர். ஆஹா.... தவிட்டில் கூட பலகாரமா? காசி மக்களின் அன்பை நான் என்னவென்று புகழ்வேன்! நான் இதுவரை போன இடங்களில் எல்லாம் கற்கண்டு சாதம், பால் சாதம், தயிர்சாதம், புளியோதரை, இன்னும் கோதுமை வகைகளில் செய்த பண்டங்கள் என சாப்பிட்டு அலுத்துப் போனேன். உங்கள் வீட்டில் எனக்குப் பிடித்த உயர்ந்த வகை பலகாரத்தை தந்திருக்கிறீர்கள். வித்ருமை தாயே! எனக்கு இது போதாது. இன்னும் இருப்பதையெல்லாம் எடுத்து வாருங்கள், என்றார். வித்ருமைக்கு மகிழ்வதா அல்லது வருந்துவதா என்பதே புரியவில்லை.
ஒரு நபருக்கு தேவையான அளவுக்கே தவிடு இருந்தது. வெல்லமும் காலி. அதைக் கொண்டு பலகாரம் செய்தாயிற்று. மகோற்கடர் இன்னமும் கேட்கிறாரா? அவள் கையைப் பிசைந்தது கண்டும், சுக்கிலரின் முகத்தில் பதட்டம் தெளிவது கண்டும் மகோற்கடர் சிரித்தார்.என் அன்பு பக்தர்களே! உங்களை நான் அறிவேன்! எனக்கு ஆடம்பரமும் அளவும் பெரிதல்ல! பக்தியுடன் ஒரு சிறு உருண்டையைத் தந்திருந்தாலும் ஏற்பேன், ஒரு கைப்பிடி பொரி தந்தாலும் எனக்குப் போதும்! என்னை உங்களுக்கு தெரியவில்லையா? என்றவர் கர்ஜனையுடன் சிரித்தபடியே, விஸ்வரூபம் எடுத்தார். சிங்க வாகனத்தில்,சித்தி புத்தி இருவரும் அமர, பதினாறு கரங்களுடன் ஆயுதம் தாங்கி விநாயகப்பெருமானாக காட்சியளித்தார். காசியில் யாருக்கும் கிடைக்காத அந்த திவ்ய காட்சி, வித்ருமையின் பக்திக்கு கிடைத்தது. விஷயம் காசிராஜனுக்கு தெரிய, அவனும், நகர மக்களும் ஓடோடி வந்து அந்த திவ்ய தரிசனத்தைக் கண்டனர். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை போல, வித்ருமையின் களங்கமற்ற எளிய பக்தி, காசி நகருக்கே விநாயகரின் தரிசனத்தைக் கொடுத்தது. பின்னர் காசிராஜன், விநாயகப் பெருமானே! தாங்களே எங்கள் அருகில் இருக்கும் போது, நாங்கள் யாரைக் கண்டு கலங்க வேண்டும்? தங்களின் திருப்பாதத்தில் என்னையும் என் தேசமக்களையும் சேர்த்து முக்தியருள வேண்டும், என்றான். விநாயகர் அவர்களிடம், இந்த தேசத்தில் பிறப்பவர்களுக்கும், இங்கே வருவர்களுக்கும், தங்குபவர்களுக்கும் முக்தியருள்வேன், என அருள்பாலித்து, அனைவரும் பூலோகத்தில் இன்னும் நீண்டகாலம் செல்வச்செழிப்புடன் வாழ அருள் செய்தார். வித்ருமை - சுக்கிலர் தம்பதிக்கு ஏராளமான செல்வத்தைக் கொடுத்து, தக்கவர்களுக்கு தானம் செய்து இறுதியில் தன் திருவடிகளை அடைய வரம் கொடுத்தார்.
இந்நேரத்தில், தன்னால் அனுப்பப்பட்ட அனைத்து அசுரர்களும் அழிந்ததால் ஆத்திரமடைந்த நராந்தகன், மகோற்கடரை நேரில் சென்று அழிக்கப் புறப்பட்டான். இதையறிந்த காசிராஜன், விநாயகரே தங்களுடன் இருக்கும் தைரியத்தில், அவரைச் சென்று வணங்கி, போரில் வெற்றி பெற ஆசி வேண்டினான்.மகோற்கடர் அவனிடம், காசிராஜா! நராந்தகனுக்கு அழிவுகாலம் வந்துவிட்டது. உன்னுடன் நானும் ஒரு போர்வீரனாக வருகிறேன், என்று சொல்லி, கவசமணிந்து வாளேந்தி புறப்பட்டார். நராந்தகனின் அசுரப்படைக்கும், காசிராஜனின் படைக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இருதரப்பிலும் எண்ணற்ற வீரர்கள் இறந்தனர். மகோற்கடரை நராந்தகன் கடுமையாக எச்சரித்தான். ஏ யானை முகத்தோனே! சிறுவனே! மரியாதையாக ஓடிவிடு. சிறுவன் என்பதற்காக உன்னை விடுகிறேன். இல்லாவிட்டால், இதற்குள் உன் தலை என் கையில் இருந்திருக்கும், என்று வீரவசனம் பேசினான். மகோற்கடர் சிரித்தார். தலை தானே கையில் வேண்டும். இந்தா பிடி, என்றவர், ஒருபாணத்தை எடுத்து நராந்தகனின் தலைக்கு குறி வைத்தார். அது அவனது சிரத்தை அறுத்து தள்ளியது. காசிராஜனின் வீரர்கள், நராந்தகன் அழிந்தான் என கோஷமிட்டனர். ஆனால், என்ன ஆச்சரியம்... மற்றொரு தலை முளைத்தது. முளைத்த தலையை மீண்டும் மகோற்கடர் கொய்ய, புதிது புதிதாக தலை முளைத்தது. அப்போது சிவனிடம் பெற்ற அஸ்திரம் ஒன்றை அவன் தலையில் எய்ய, நராந்தகனின் ஆவி பறந்தது. அவனது தலை தேவலோகத்தில் ஆட்சியில் இருந்த தேவாந்தகனின் காலில் போய் விழுந்தது. ஆ சகோதரா! போய் விட்டாயா? உன்னைக் கொன்றவர்கள் யார்? தேவாந்தகன் வாளை உருவினான்.