பதிவு செய்த நாள்
07
மார்
2011
03:03
பக்தர்களே! நான் சொல்லும் இந்தக் கதையைக் கேளுங்கள். இதைக் கேட்ட பின், என் லோகத்தை அடைய, இங்கே கூடியிருக்கும் அனைவரும் கொடுக்க வேண்டிய விலையைத் தெரிந்து கொள்வீர்கள், என்று சொல்லி தன்னால் சம்ஹரிக்கப்பட்ட அனலாசுரன் பற்றி சொன்னார். ஒருமுறை, எமதர்மராஜா தேவலோகப் பெண்களின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தார். அந்த மோக மயக்கத்தில், அவரிடம் இருந்து அனலாசுரன் என்ற அசுரன் வெளிப்பட்டான். அவன் நின்ற இடம் தகித்தது. எமதர்மராஜா தன்னைப் பெற்றவர் என்பதால், அவரை விட்டுவிட்டு, மற்ற தேவர்களை விரட்ட ஆரம்பித்தான். அவன் அருகில் நெருங்கினாலே கடும் வெப்பம் ஏற்பட்டதால் அவர்கள் தீயில் நிற்பதைப் போல உணர்ந்தனர். தங்களுக்கு புகலிடம் தேடி அவர்கள் திருமாலிடம் சென்றனர். திருமால் அவர்களைச் சமாதானம் செய்து, இந்த அசுரனை அழிக்கும் சக்தி என் மருமகன் கணபதிக்கு மட்டுமே உண்டு. எல்லோரும் கணபதியைத் தியானியுங்கள், எனசொல்லிவிட்டார். அனைத்து தேவர்களும் மானசீகமாக தங்கள் மனதில் விநாயகரை ஆவாஹனம் செய்து வழிபட்டனர். அப்போது விநாயகர், மனித முகத்துடன் ஒரு பிரம்மச்சாரி இளைஞனாக அவர்கள் முன் வந்து நின்றார். தேவர்களே! நீங்கள் ஏன் கலங்க வேண்டும்? அந்த அசுரனை என்னால் கொல்ல முடியும்? என்றதும், நீயோ சிறுவன், அவனோ அசுரன். உன்னால் எப்படி அவ்வளவு பெரிய அசுரனைக் கொல்ல முடியும்? என்று ஆதங்கத்துடன் கேட்டனர். அந்த இளைஞன் சிரித்தான். அந்நேரத்தில், தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி நின்று, ஒரு பிரம்மச்சாரியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் அனலாசுரனுக்கு கிடைக்கவே, அவன் வேகமாக அங்கே வந்தான். தேவர்கள் வெம்மை தாங்காமல் அங்குமிங்கும் சிதறி ஓடினர். அந்த இளைஞனோ எதையும் கண்டு கொள்ளாமல் நின்றான். தேவர்கள் ஆச்சரியப்பட்டனர். அனலாசுரன் இளைஞனின் அருகில் வந்து, வெப்பத்தால் உலகத்தையே அழிக்கும் சக்தி என்னிடம் உண்டு. நீயோ அப்படியே நிற்கிறாய். யார் நீ? என் உடலில் இன்னும் சூடேற்றினால் நீ உருகிப்போவாய், என எச்சரித்து கடைவாய் கோரைப் பற்கள் வெளிப்படும்படியாக சிரித்தான்.
அப்போது அவனது வாயில் இருந்து தீ வெளிப்பட்டது. விநாயகர் அதை ஊதி அணைத்தார். அவன் வெம்மையைக் கடுமையாக்கி பூலோகத்தில் பாய்ந்தான். அங்கிருந்த உயிர்களை அழிக்க முயன்ற போது, இளைஞனான கணபதி பூமியை விழுங்கி வயிற்றுக்குள் தள்ளிவிட்டார். இவ்வாறாக ஏழு லோகங்களையும் அவன் தீ வைக்க முயன்ற போது, எல்லா உலகங்களையும் தன்னுள் அடக்கினார் கணபதி. அவரது வயிறு பானை போல் ஆனது. பின்னர் அந்த இளைஞனிடம், சிறுவனே! மரியாதையாக ஓடிவிடு. மாயவேலைகளை எல்லாம் என்னிடம் காட்டாதே. ஏழு லோகங்களையும் விழுங்கி வேடிக்கை காட்டும் உன்னை அந்த லோகங்களுடன் விழுங்கி விடுவேன், என எச்சரித்தான். உடனே இளைஞனாக வந்த கணபதி சுயவடிவம் கொண்டு, தன் தும்பிக்கையால் அவனை வளைத்து இறுக்கி அந்தரத்தில் தூக்கினார். அவன் தும்பிக்கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழே குதித்தான். கணபதி அவனிடம், அனலாசுரா! உனக்கு கொடிய பசி போலும். என் வயிற்றுக்குள் போ. அங்கே ஏழு உலகங்கள் இருக்கின்றன. அத்தனையையும் எடுத்துக் கொள், என்றார். அவனும், நல்லது, நல்லது என்றபடியே வயிற்றுக்குள் சென்றான். அவன் உள்ளே சென்றானோ இல்லையோ, மூடிய வாயைக் கணபதி திறக்கவில்லை. தப்ப வழியின்றி அவன் தவித்தான். விநாயகரோ அவனை உள்ளடக்கிக் கொண்டு வெப்பம் தாளாமல் தவித்தார். தேவர்கள் அவருக்கு கொடுத்த இளநீர், பால் எதுவும் சூட்டைத் தணிக்கவில்லை. சித்தி, புத்தியர் தங்கள் அங்கங்களால் அவரது வெப்பத்தைத் தணிக்க முயன்று தோற்றனர். என்ன தான் செய்வது! அவர்கள் விநாயகரையே சரணடைந்தனர். விநாயகர் அவர்களிடம், நீங்கள் செய்யும் எந்த பரிகாரமும் என்னை திருப்திப்படுத்தாது.
எனக்குத் தேவை அருகம்புல். அதை உங்களால் முடிந்த அளவு கொண்டு வந்து குவியுங்கள். வெப்பம் தணிந்து விடும், என்றார். தேவர்கள் அருகம்புல்லைக் கொண்டு வந்து குவித்தனர். அவரது உடலையே அருகம்புல்லால் மூடுமளவு கொட்டினர். விநாயகரின் வெப்பம் தணிந்தது. அனலாசுரனும் உள்ளுக்குள்ளேயே ஜீரணமாகி விட்டான். இந்த வரலாற்றை பக்தர்களிடம் சொன்ன கணபதி, இப்போது சொல்லுங்கள், என் லோகத்தை அடைய நீங்கள் கொடுக்க வேண்டிய விலை என்ன என்பதை! என சொல்லவே, ஆஹா... கருணைக் கடலே! பல்வகை நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க மாலைகளும், ஏராளமான பிரசாத வகைகளும் தங்களுக்கு தரப்பட வேண்டுமோ என நாங்கள் அறியாமையால் ஆளுக்கொரு வகையில் கற்பனை செய்தோம். எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் சாதாரண அருகம்புல்லால் உங்களை அடைந்து விடலாம் என்றால் நாங்கள் செய்த பாக்கியம் தான் என்னே! என்றனர். அன்றுமுதல், விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சிக்கும் வழக்கம் ஏற்பட்டது. அருகம்புல் தவிர தங்களுக்கு பிடித்தமான பூக்களையும் நாங்கள் அணிந்து மகிழ ஆசைப்படுகிறோம். அதையும் சொல்லுங்கள், என்றனர் பக்தர்கள். ரோஜா, மல்லிகை, முல்லை, சம்பங்கி இன்னும் பல்வேறு வாசனையுள்ள மலர்களை இங்கே கூடியிருக்கும் பெண்களே வைத்துக் கொள்ளுங்கள். ஆடவர்கள் தங்கள் மார்புகளில் மாலையாகத் தரித்துக் கொள்ளுங்கள். எனக்கு அவை தேவையில்லை. உங்களுக்கு எது தேவையில்லை எனக் கருதுகிறீர்களோ, அதை எனக்கு மாலையாக அணிவித்தால் போதும், என விநாயகர் கருணை உள்ளத்துடன் சொன்னார். அது என்ன வகை பூ? என்று மக்கள் கேட்டதும், இதோ! இந்த பூவை யாராவது சூடுவீர்களா? என்று அங்கு நின்ற செடி ஒன்றைச் சுட்டிக்காட்டினார் விநாயகர். மக்கள் அதிசயித்துப் போயினர்.